Ilaiyaraaja: என்ன கொடுமை தனுஷ் இது..? இளையராஜா பயோபிக் பரிதாபங்கள்… வில்லனாகும் அருண் மாதேஸ்வரன்..?
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. இந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் பெருமிதமாகவும், இந்தியத் திரையிசையின் அடையாளமாகவும் கொண்டாடப்படுபவர் இளையராஜா. இசைஞானி, ராகதேவன் என பலவிதங்களில் ராஜாவை ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கின்றனர். தனது 33வது வயதில் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, இப்போது 80-ஐ கடந்துவிட்டார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் பல்லாயிரகணக்கான பாடல்கள் மூலம் தமிழ்ச் சமூகத்துக்கு மாபெரும் தொண்டாற்றியவர் இந்த இசை சித்தர் இளையராஜா.
இப்போது அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. இளையராஜா என்ற பெயரில் உருவாகும் இப்படத்தில் அவரது கேரக்டரில் தனுஷ் நடிக்கவுள்ளார். இதனையறிந்த ராஜாவின் ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்துக் கொண்டிருந்த அத்தருணத்தில் தான் இன்னொரு பேரிடியும் அவர்களின் தலையில் விழுந்தது. அதாவது இளையராஜா பயோபிக்கை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார் என்ற தகவலை கேட்டு, “என்ன கொடுமை தனுஷ் இது” என மைண்ட் வாய்ஸில் புலம்ப ஆரம்பித்துவிட்டனர் ரசிகர்கள்.
ராக்கி, சாணிகாகிதம், கேப்டன் மில்லர் என அருண் மாதேஸ்வரன் இயக்கிய படங்கள் ரத்தமும் சதையுமாக ராவான ஆக்ஷன் காட்சிகளால் ரசிகர்களை கலங்கடித்தன. அப்படிப்பட்ட ஒருவர் இளையராஜாவின் பயோபிக்கை எப்படி இயக்கப் போகிறார் என்பது தான் இப்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக இதனை ட்ரோல் செய்து சில மீம்ஸ்களும் வைரலாகி வருகின்றன.
இளையராஜா ஃபர்ஸ் லுக் போஸ்டரில் தனுஷ் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து இறங்கி நிற்பதாக இருக்கிறது. ஆனால், தேனியில் இருந்து சென்னை வரும் இளையராஜா நியாயமாகப் பார்த்தால் எக்மோரில் தானே இறங்கியிருப்பார். அட அதுகூட பரவாயில்ல, இளையராஜாவுடன் சென்னை வந்த பாவலர் பிரதர்ஸ் எங்கே, ஏன் இவர் மட்டும் தனியாக நிற்கிறார் என போஸ்டரில் இருந்தே பஞ்சாயத்தை தொடங்கிவிட்டனர். அதேபோல், இளையராஜா பற்றி ஒரு ஆவணப்படமோ புனைவோ எடுப்பதற்கு தமிழ் வெகுசன வளர்ச்சி, இருபதாம் நூற்றாண்டு தமிழக அரசியல் வரலாறு, தமிழ் பண்பாட்டு அரசியல் என ஆழமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இல்லை என்றால் இன்னொரு சூரறைப் போற்று தான் மிஞ்சும் என நெட்டிசன் ஒருவர் வெளுத்து வாங்கியுள்ளார்.
மேலும், ராக்கி, சாணிக்காயிதம் பாணியில் இளையராஜா பயோபிக்கில் இசைக் கருவிகளுக்குப் பதிலாக, நவீன துப்பாக்கிகள், ஆயுதங்களை கொடுத்து இயக்கிவிடப் போகிறார் என அருண் மாதேஸ்வரனை கலாய்த்து வருகின்றனர். இதில் அல்டிமேட்டாக கவுண்டமணியின் ‘நின்னுக்கோரி வர்ணம்’ என்ற காமெடியை வைத்து வைரலாகும் மீம்ஸ், தனுஷ் ரசிகர்களுக்கே ஜெர்க் கொடுத்துள்ளது. இத்தனை கலோபரங்களுக்கு மத்தியிலும், இளையராஜா பயோபிக்கை அருண் மாதேஸ்வரன் சிறப்பாக இயக்கிவிடுவார் என ரசிகர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். முன்னதாக இளையராஜா பயோபிக் மூவியை பால்கி இயக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?