முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இல்லத்தில் ரெய்டு - ED அதிரடி

அதிமுக நேற்று வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட நிலையில் இன்று விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை.

Mar 21, 2024 - 10:21
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இல்லத்தில் ரெய்டு - ED அதிரடி

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

அதிமுக ஆட்சியின் போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. மேலும், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதற்கு சட்டவிரோதமாக பணம் பெற்றதாக அவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 

கடந்த 2021-ல் கேரளாவை சேர்ந்த ஷர்மிளா என்பவர் அளித்த பண மோசடி புகாரில் விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதன் பேரில் கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவர் விசாரணைக்கு ஆஜராகினார். 

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் சி.விஜயபாஸ்கரின் இல்லத்தில் இன்று (மார்ச் 21) காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது பெற்றோரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. 

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று ( மார்ச் 20) முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டது. இந்த சூழலில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow