ஜூன் 3 'செம்மொழி' நாள்... 'சட்டத்தமிழ்' பாடத்திட்டம்... சட்டப்பேரவையில் புதிய அறிவிப்புகள்!
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் ஒரு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் புதியதாக அமைக்கப்படும். கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் மற்றும் மதுரையில் ஒரு கூடுதல் குடும்பநல நீதிமன்றம் அமைக்கப்படும்.
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கியது. 4வது நாளாக இன்று சட்டப்பேரவை கூடியது முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. உறுப்பினர்களின் கேள்விக்கு, அந்தந்த துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.
மேலும் பல்வேறு துறைகளின் கீழ் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையில் பல புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதன் விவரம் பின்வருமாறு:-
* அடுத்த ஆண்டு முதல் கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி முதல் செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்படும். ஆண்டுதோறும் அக்டோபர் 12ம் தேதி செம்மொழி தமிழ்நாள் விழாவாக கொண்டாடப்படும்.
* பள்ளி கல்லூரி மாணவர்களிடையே கட்டுரை பேச்சுப்போட்டி மாவட்ட மாநில அளவில் நடத்தி பரிசுத்தொகை வழங்கப்படும் இதற்காக ரூ.1,88,57,000 வழங்கப்படும்.
* தமிழ் அறிஞர்கள் ஒன்பதின்மர் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும். நூலுரிமை தொகைக்கு என்று ரூ.91,35,000 வழங்கப்படும்.
* சிறந்த நூலை எழுதிய நூலாசிரியர் நூலை பதிப்பிக்கும் பதிப்பாளருக்கு பரிசு தொகை உயர்த்தி வழங்கப்படும். கூடுதல் செலவினத்திற்கு ரூ.11,55,000 வழங்கப்படும்.
* ஜனவரி 25ம் தேதியை தமிழ்மொழித் தியாகிகள் நாள் என பின்பற்றி புகழ் வணக்கம் செய்திட ரூ.2 லட்சம் வழங்கப்படும்.
* முத்தமிழ் அறிஞர் கலைஞர் விருது தோற்றுவிக்கப்பட்டு ரூ.17 லட்சம் ஆண்டுதோறும் வழங்கப்படும்.
நீதி நிர்வாக துறையின் கீழ் வெளியிடப்பட்ட புதிய அறிவிப்புகள்:-
* திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் ஒரு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் புதியதாக அமைக்கப்படும்.
*கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் மற்றும் மதுரையில் ஒரு கூடுதல் குடும்பநல நீதிமன்றம் அமைக்கப்படும்
* போதை மருந்துகள் மற்றும் மன மயக்க பொருட்கள் சட்டம், 1985-ன் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிப்பதற்காக திருநெல்வேலியில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.
* மாற்றுரிமை ஆவணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிப்பதற்காக செங்கல்பட்டில் விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும்.
* அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955ன் கீழ் நுகர் பொருள் குற்ற புலனாய்வுத் துறையில் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிப்பதற்காக சென்னையில் ஒரு சிறப்பு புலனாய்வு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைக்கப்படும்.
* கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் ஒரு மாவட்ட உரிமையில் மற்றும் குற்றவியல் நீதித்துறை முடுவர் நீதிமன்றம் புதிதாக அமைக்கப்படும்.
* கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் புதியதாக அமைக்கப்படும்.
சட்டத்துறையின் கீழ் வெளியான புதிய அறிவிப்புகள்:-
* அரசு சட்ட கல்லூரிகளில் 'சட்டத்தமிழ்' எனும் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
* 6 அரசு சட்டக் கல்லூரிகளில் 5ம் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு சட்டப் படிப்புகளில் தலா 40 மாணவர்கள் என மொத்தம் 480 மாணவர்கள் கூடுதலாக அனுமதிக்கப்படும்.
* சீர்மிகு சட்டப்பள்ளியில் சொத்துரிமை சட்டம் மற்றும் தடயவியல் சட்டம் என இரண்டு புதிய முதுகலை சட்டப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.
* அரசு சட்டக் கல்லூரியில் 'மாணவர்கள் வள மேலாண்மை திட்டம்' உருவாக்கப்படும்.
What's Your Reaction?