'குலதெய்வ வழிபாட்டுக்கு தடை விதிக்கணும்'... ஆர்.என்.ரவி பேசியது உண்மையா?... ஆளுநர் மாளிகை விளக்கம்!
'இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பும் செயல், மாநிலத்தின் மிக உயரிய பதவி வகிப்பவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது மட்டுமின்றி பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறது மற்றும் அமைதியின்மையை உருவாக்குகிறது'
சென்னை: குலதெய்வ வழிபாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாக வதந்தி பரப்பப்படுகிறது என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 58 பேர் பலியாகி விட்டனர். 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறி விட்டதாகவும், இந்த விவாகரத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றும் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து இருந்தார். மேலும் இந்த சம்பவம் சட்டவிரோத மதுபான தயாரிப்பு மற்றும் நுகர்வு ஆகியவற்றைத் தடுப்பதில் தொடரும் குறைபாடுகளை பிரதிபலிக்கின்றன என்றும் ஆளுநர் குற்றம்சாட்டி இருந்தார்.
இதற்கிடையே, 'தமிழர்களைச் சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குலதெய்வங்கள் தான். சாராய மரணங்களுக்கு அடிப்படைக் காரணமான குலதெய்வ, நாட்டார் தெய்வ, கிராமக் கோயில் திருவிழாக்களைத் தடைசெய்ய வேண்டும். குலதெய்வ வழிபாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்' என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாக சமூகவலைத்தலத்தில் ஒரு செய்தி பரவியது.
இந்நிலையில், குலதெய்வ வழிபாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாக வதந்தி பரப்பப்படுகிறது என ஆளுநர் மாளிகை விளக்கம் அளிக்கத்துள்ளது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழர்களைச் சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குலதெய்வங்கள் தான். சாராய சாவுகளுக்கு அடிப்படைக் காரணமான குலதெய்வ, நாட்டார் தெய்வ, கிராமக் கோயில் திருவிழாக்களைத் தடைசெய்ய வேண்டும். குலதெய்வ வழிபாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் - ஆளுநர் ரவி என சில ஊடகங்கள் வாயிலாக செய்திகள் பகிரப்படுகின்றன.
இந்த விஷயத்தில், இதுபோன்ற செய்திகளை ஆளுநர் மாளிகை முற்றிலுமாக மறுப்பதோடு, தவறான நோக்கத்துடன் பரப்பப்படும் போலி செய்திகளால் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறது.
இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பும் செயல், மாநிலத்தின் மிக உயரிய பதவி வகிப்பவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது மட்டுமின்றி பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறது மற்றும் அமைதியின்மையை உருவாக்குகிறது.
இந்த போலியான தகவலைப் பரப்பியவர்கள் பற்றி முழுமையாக விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு ஆளுநர் மாளிகை காவல்துறையில் முறையான புகார் ஒன்றை அளித்துள்ளது. இந்த பிரச்சனையை உடனடியாக எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்ததற்காக பொதுமக்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு ஆளுநர் மாளிகை கூறியுள்ளது.
What's Your Reaction?