வீட்டு வேலைக்காக கைதி சித்ரவதை.. சிபிசிஐடி விசிட்டால் பரபரப்பான வேலூர் சிறை
அடுத்ததாக இன்னும் 10 சிறை கைதிகளிடம் விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்தி சித்ரவதை செய்த வழக்கில் வேலூர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரை வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி வீட்டில் வேலைக்கு பணியமர்த்தப்பட்டபோது பணம், நகைகளைத் திருடியதாகச் சித்ரவதை செய்து தாக்கியதாக அவரது தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வேலூர் சிறை டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் எஸ்.பி அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்முருகன் உள்பட 14 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து வேலூர் சிறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
மேலும் கூடுதல் எஸ்.பி அப்துல்ரகுமான் புழல் சிறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில், வேலூர் மத்தியச் சிறையில் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சிவகுமாருடன் இருந்த ஆயுள் தண்டனை கைதிகளிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.இதுவரை 5க்கும் மேற்பட்ட சிறை கைதிகளிடம் நடந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்றுள்ளனர்.
அடுத்ததாக இன்னும் 10 சிறை கைதிகளிடம் விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். எத்தனை மாதங்களாக சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி வீட்டில் ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் பணியாற்றினார்? என்ன நடந்தது அங்கே? என பல்வேறு கேள்விகளை கேட்டு மற்ற கைதிகளிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெறும் நடவடிக்கையில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேலும் நகைகளை மறைத்து வைத்திருப்பதாகக் கூறப்படும் கிருஷ்ணகிரியில் உள்ள கைதி சிவகுமாரின் வீட்டிற்கு சிபிசிஐடி போலீசார் சென்று விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
What's Your Reaction?