வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே - 3

பொருளாதரமும் வாழ்க்கைக்கு வேண்டும், ஆனால் பொருளாதாரம் மட்டுமே வாழ்க்கை அல்ல.

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே  - 3
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே  - 3

- மதுகேசவ் பொற்கண்ணன்

'நீ தேடிக் கொண்டிருப்பது 

உன்னைத்

தேடிக்கொண்ட்டிருக்கும்'

                                                   - ரூமி 

எத்தனை எத்தனை மனிதர்களைச் சந்தித்தாலும் கிடைக்காத ஒரு மகிழ்வும் சந்தோஷமும் ஒருவரைச் சந்தித்தவுடன் சட்டென பரவசம் ஊற்றெடுக்கும்.  அது எந்த வயதாக இருந்தாலும். ஆம் நண்பர்களே!  அந்த மனிதர் வேறு யாருமல்ல,.. நம் பள்ளி வகுப்பு தோழனோ, தோழியோதான்!

பள்ளி வயது கடந்து கல்லூரி முடித்து அலுவலகம் தொழில் என வாழ்வில் ஆயிரம் ஆயிரம் மைல்கள் கடந்து வந்துவிட்ட போதிலும்,  திடீர் எனச் சந்திக்கும் பள்ளி வகுப்பு தோழன் கொடுக்கும் இன்ப அதிர்வுகளை வார்த்தைகளில் வடித்துவிட முடியாது. அதுவும் திடீரென அந்த சந்திப்பு நிகழ்ந்து விட்டால்? எப்படி இருக்கும்!

மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை திருத்துறைப்பூண்டி அருகே இருக்கு நெடும்பலம் பள்ளியில் படித்த நண்பர்களில் என் மனதை விட்டு அகலாத ஜலாலுதீன், தேவதாஸ், அண்ணாதுரை, அன்புச்செல்வி, ராமத்திலகம், வடுகநாதன், மகேந்திரன் ஆகியோரைப் பிரிந்து ஆறாம் வகுப்பில்  பள்ளங்கோயில் பள்ளிக்குச் சென்று விட்டபோதிலும், அவர்களை மனம் திரும்பத் திரும்ப தேடிக் கொண்டே இருக்கும். 

’பசுமை நிறைந்த நினைவுகளே.... பாடித் திரிந்தப் பறவைகளே’ பாடலை கேட்கும்போதும் சரி,   ‘முஸ்தபா முஸ்தபா டோன்ட் ஒரி முஸ்தபா… மூழ்காத ஷிப்பே பிரண்ட்ஷிப்தான் ..’’ என்கின்ற  வாலியின் வரிகளைக் கேட்கும்போதும் சரி, ஜலாலின்  நினைவுகளில் மூழ்கிவிடுவேன். அவனது குறும்பும் குதூகலமும் அவனை வகுப்பில் எல்லோருக்கும் பிடிக்கும்.  பள்ளி மற்றும் கல்லூரி முடித்து பணியிலும் சேர்ந்து சுமார் 30 ஆண்டுகள் ஆன பின்பு, எனது அலுவலகத்திற்கு புதிதாக மாற்றலாகி வந்த ரஹ்மத் பேகம் என்ற அலுவலர் எனது இருக்கைக்கு  பக்கத்திலேயே அவருடைய பிரிவும் என்பதால்  அவருடன் சாதாரணமாகப் பேசிக்  கொண்டிருப்பேன். அப்போது,  அவருடைய ஊரும் திருத்துறைப்பூண்டி அருகில் என்பதால், நெடும்பலம் பள்ளியைப்  பற்றி பேச்சு வந்தபோது,  ‘’உங்களுக்கு ஜலாலுதினைத்  தெரியுமா?’’  என்று கேட்டேன். அவர் கூறிய பதில்தான் ஆச்சரியம். ‘’ஜலாலைத் தெரியுமாவா?  அவன் எனது அத்தை பையன்,  துபாயில் இருக்கிறான்’’  என்று கூறியதைக் கேட்டதும் அடைந்த அந்த ஆனந்தம், அந்த மகிழ்ச்சி சொல்லில் வடிக்கவே  முடியாது. 

30 ஆண்டுகளாகத் தேடிய நண்பனைத் தெரியும் என்று ஒருவர்  சொன்னதைக் கேட்ட நான் பரவசத்தில் துள்ளிக் குதித்தேன். இதை அவர்கள் ஜலாலுக்கு கடிதம் மூலம் தெரிவித்துவிட்டார்கள். அவன் துபாயில் இருந்து சென்னை வந்து ஊருக்கு செல்லும் முன் நேராக எங்கள் அலுவலகத்திற்கே வந்துவிட்டான். இருவரும் சந்தித்த அந்த நாள் நினைவுகள் என்றும் மறக்க முடியாதது. ஏன் இப்படி உள்ளம் துள்ளித் துள்ளி ஆடுகிறது? பாடுகிறது? அந்த மூன்றாம் வகுப்பு தோழனைச் சந்தித்ததும். அப்போது இருவருக்கும் திருமணமாகி குழந்தைகளுக்கு அப்பாவாக ஆகிவிட்ட நிலையில் இருந்தும் வானமே கைக்கு எட்டி விட்டது போன்ற துள்ளலை அடைந்தோம். இருவருக்கும் பேசுவதற்கு என்ன இருக்க முடியும்? அன்று படித்த நண்பர்களைப் பற்றியும், வகுப்புகள் எடுத்த ராஜமாணிக்கம் சார், பக்கிரிசாமி சார், வாசுதேவன் சார், வசந்தா டீச்சர், ராமஜெயம் சார் போன்றவர்களை நினைவு கூர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். பள்ளி இடைவேளைகளில் பள்ளிக்கருகில் இருந்த எங்கள் வீட்டிற்கு இருவரும் ஓடிச் சென்று தண்ணீர் குடித்து விட்டு வருவது , அன்று விளையாடிய விளையாட்டு நினைவுகள் என்று பல்வேறு விஷயங்களைப்  பேசிக்கொண்டிருந்தோம்.

நான் தேடிய நண்பர்களை அவனும்  தேடி இருக்கிறான். உள்ளத்தால் நட்பை தேடும் உணர்வு இருந்தால் இயற்கை அவர்களை இணைத்து விடும் என்பதற்கு ஜலாலைக் கண்டுபிடித்ததே அத்தாட்சி! 

ரஹ்மத்பேகத்திற்கு ஏன் எங்கள் அலுவலகத்திற்கு பணி மாறுதல் கிடைக்க வேண்டும்? அவர் ஏன் எனது செக்ஷனுக்கு அருகிலேயே பணியாற்ற இடம் ஒதுக்கப்பட வேண்டும்? சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கும் போது ஏன் ஜலால் பற்றிய பேச்சு வரவேண்டும்? எல்லாவற்றுக்கும் ஒரே விடைதான். நான் அவனைத் தேடி இருக்கிறேன்; அவன் என்னை தேடி இருக்கிறான். அந்த சந்திப்பு இன்றும் மறக்க முடியாத சந்திப்பு. அவன் அன்புச்செல்வி அண்ணாதுரை இருவரை மட்டுமே அறிய முடிந்ததாகக்  சொன்னான். பின் நாங்களும் சந்தித்துக் கொண்டோம்.

இந்த நட்பில் என்ன மைய இழை? ஏன் எத்தனையோ நட்புகள் இருந்த போதும் அந்த ஆரம்ப பள்ளி மாணவப் பருவ நட்புக்கு ஏன் இத்தனை அழுத்தமும் ஈர்ப்பும்? அது இயற்கை நியதி. பிஞ்சு உள்ளங்களில் கள்ளம் கபடமற்ற மலர்ந்த உண்மையான அன்பு அது; என்றும் மாறாதது, மறையாதது,  ஆழமானது, அழுத்தமானது,  அழகானது.  எதிர்பார்ப்புகள் ஏதுமில்லாத இளம் மனதின் இனம் புரியா இதயங்களின் இணைப்பு அது! 

காலங்கள் பல கடந்தும் அந்த நட்புக்கு ஏன் இத்தனை ஈர்ப்பு? இன்று நம் குழந்தைகளுக்கு அத்தகைய நட்பு கிடைக்கிறதா? பள்ளிகளில் வகுப்பறைகளில் வீட்டில் என்று எல்லா இடங்களிலும் அவர்களுக்குக் கல்வி மீதான சுமையும் அழுத்தமும் தெரிந்தோ, தெரியாமலோ தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ப்ளே ஸ்கூல், ப்ரீ கேஜி, எல்கேஜி,  யுகேஜி என்று ஆரம்பித்து, ஸ்டேட் போர்டு, மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்சி  என்று விதவிதமான கல்வி முறைகள், பாடங்களின் மீது ஒரு அழுத்தம் அவர்களுக்கு இருந்துகொண்டே இருக்கிறது. பின்பு டியூஷன், பாட்டு, கராத்தே, மேத்ஸ், சயின்ஸ் என தனித்தனி ஓவர் டைம் வகுப்புகளுக்குள்ளும் அவர்களைத் திணித்துவிடுகிறோம். காலை மாலை என டியூஷனுக்கு அனுப்புவதும், அன்று போல் பள்ளி விடுமுறை நாட்களில் தாத்தா பாட்டி வீடுகளுக்கு அனுப்பாமல், சம்மர் கோர்ஸஸ் என்ற பெயரில் நூற்றுக் கணக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பல்வேறு வகுப்புகளில் அவர்களுக்கு எக்ஸ்ட்ரா கரிகுலரைக் கற்றுக் கொடுக்கிறேன் பேர்வழி என்று அவர்களைத் தொடர்ந்து ஒரு வித அழுத்தத்தில் வைத்துக் கொண்டே இருக்கிறோம்.

அந்தத் தொடர் அழுத்தத்துடன் ஓட ஆரம்பித்த குழந்தைகள் பின், நெட் ,ஜெட், நீட், என புதுப்புது போட்டி தேர்வுகளுக்குத் தயாராகும் மனப்போராட்டம். போட்டியில் வென்ற பின் கவுன்சிலிங்கில் இடம் கிடைத்து கல்லூரிக்குச் சென்ற பின்பும், எதிர்காலத்தில் தன்னுடைய வாழ்க்கையை நிலைநிறுத்திக் கொள்ள, கேம்பஸ் செலக்ஷன் என்னும் அடுத்த அழுத்தமும் அவர்களைத் துரத்துகிறது. இந்தத் தொடர் ஓட்டப் பந்தயத்தில் இருக்கும் இன்றைய குழந்தைகள் இழந்தது என்னவோ அவர்களது ஜலால்களைத்தான்!

வாழ்க்கை வாழ்வதற்கே…’ என்ற அடிப்படை மறந்து போய், வாழ்க்கை பொருளாதாரத்தின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்ற மாயைக்குள் நாம் எல்லோருமே விழுந்துவிட்டோம்.  பொருளாதாரத்தை நோக்கி குழந்தைகளையும்  ஓடப் பழக்கிவிட்டோம்!

குழந்தைகளைக் குழந்தைகளாக வளர்க்கும் நம் முன்னோர்களின் வளர்ப்பு முறையே நமக்கு மறந்துவிட்டது. அதனை மீட்டெடுக்க வேண்டும். 

கலீல் ஜிப்ரான்  ‘தி ப்ரொபெட்’  என்ற தனது நூலில் இப்படி எழுதுகிறார்:

’உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல.

அவர்கள் வாழ்க்கையின் தனக்கான ஏக்கத்தின் மகன்கள் மற்றும் மகள்கள்.

அவை உங்கள் வழியாக வருகின்றன, ஆனால் உங்களிடமிருந்து அல்ல,

அவர்கள் உங்களுடன் இருந்தாலும், அவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல.

நீங்கள் அவர்களுக்கு உங்கள் அன்பைக் கொடுக்கலாம், ஆனால் உங்கள் எண்ணங்களை அல்ல.

ஏனென்றால் அவர்களுக்கும் அவரவர் சொந்த எண்ணங்கள் உண்டு’

– இந்த கவிதை  நாம் இதுவரை நம் குழந்தைகளைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தவற்றை எல்லாம்  எப்படி சம்மட்டி கொண்டு  உடைக்கிறது பாருங்கள்.

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். அதற்கான தனியான விருப்பங்கள் கூட இருக்கும். ஒரு குழந்தை விளையாட்டு வீரனாக ஆக வேண்டும் என்று விளையாட்டில் ஆர்வமாக இருந்திருக்கும். ஆனால் பெற்றோர்கள் நாம் அதை மடைமாற்றி கல்வியின் மீது மட்டும் கவனத்தைச் செலுத்த வைக்கிறோம். அதேபோல் ஒரு குழந்தை விஞ்ஞானி யாகலாம்; கவிஞன் ஆகலாம்; ஓவியராகலாம்; எழுத்தாளராகலாம்; மிகச் சிறந்த பொறியியல் வல்லுநர் ஆகலாம்; புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்கும் ஆர்வம்இருந்திருக்கலாம்; பெரிய தொழிலதிபராக உருவாகலாம்; சிறந்த கலைஞர்களாக உருவாக்கலாம்;  சிறந்த அரசியல்வாதிகளாக உருவாகலாம்; ஆனால் அதற்கெல்லாம் அவர்களுக்கு அந்தத் திறமை இருக்கிறது என்பதை நாமும் அறியாமல் இன்றைய பொருளாதாரம் சார்ந்த கல்வி முறைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து குழந்தைகளின் மனதை அதை நோக்கி பயணப்பட வைக்கின்றோம்!

பொருளாதரமும் வாழ்க்கைக்கு வேண்டும்; ஆனால் பொருளாதாரம் மட்டுமே வாழ்க்கை அல்ல; என்பதையும் நாம் உணர்ந்து, கல்வியோடு,  அவர்கள் இந்த உலகிற்கு என்னவாக வாழ வந்திருக்கின் றார்களோ அதற்கான வாய்ப்பு, வசதிகளை, வழிகளை நாம் ஏற்படுத்திக் கொடுப்பதும் பெற்றோர்களின் கடமையாகும்.

விரிந்து பரந்த இந்த விசாலமான பரபரப்பான உலகில்  தங்களுடைய ஜலால்களைக் கண்டுபிடித்துவிட்ட பள்ளித் தோழர்களைக் கேட்டுப்பாருங்கள் நண்பர்களே, "லைஃப் இஸ் பியூட்டிஃபுல்"  என்பார்கள்.

- இன்னும் வரும்…

மதுகேசவ் பொற்கண்ணன்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow