6 மாநிலங்களில் வெப்ப அலை... அவசரமாக கூடிய தேர்தல் ஆணையர்கள்.. 6 கட்ட வாக்குப்பதிவு தேதி மாற்றமா..?

தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Apr 22, 2024 - 21:31
6 மாநிலங்களில் வெப்ப அலை... அவசரமாக கூடிய தேர்தல் ஆணையர்கள்.. 6 கட்ட வாக்குப்பதிவு தேதி மாற்றமா..?

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் தமிழகம், கர்நாடகா வடக்கு, மத்திய பிரதேசம் கிழக்கு, உத்திர பிரதேசம் கிழக்கு, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வெப்ப அலை காரணமாக பொதுமக்கள் அசவுகரியமான சூழலை எதிர்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

ஏழு கட்ட மக்களவைத் தேர்தலில் முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இன்னும் 6 கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இந்தியா முழுவதும் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நாட்டின் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

இந்த நிலையில் கேரளாவில் வருகிற 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அம்மாநிலத்தின் பத்தினம் திட்டா, எர்ணாகுளம்,  கண்ணூர், ஆலப்புழா, கோட்டயம், மலப்புரம், கொல்லம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் உயர் வெப்ப நிலை எச்சரிக்கை மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மேற்கு வங்கத்தில் சிவப்பு எச்சரிக்கையும், ஒடிசாவில் ஆரஞ்சு எச்சரிக்கையும், பீகார், டெல்லி, ஜார்க்கண்டில் வெப்ப அலை வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கடுமையான வெப்பம் தாக்கும் என்பதால் வாக்குப்பதிவு, பிரசாரம் நடைமுறைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்று அதிகாரிகள் விவாதித்துள்ளனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow