அமித்ஷா குறித்து அவதூறு பேச்சு-நீதிமன்றத்தில் ராகுல் காந்தி இன்று நேரில் ஆஜர்..!
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அவதூறு வழக்கு தொடர்பாக உத்தரப்பிரதேசம் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி இன்று நேரில் ஆஜராகிறார்.
2018ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி கர்நாடகா தேர்தலையொட்டி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கொலைகாரன் எனக் கூறியதாகத் தெரிகிறது. இதனை எதிர்த்து பாஜக நிர்வாகி விஜய் மிஸ்ரா என்பவர் சுல்தான்பூரில் உள்ள எம்.பி-எம்.எல்.ஏக்கள் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
உரிய ஆதாரங்களுடன் குற்றத்தை நிரூபித்து அதிகபட்ச தண்டனையாக ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுத் தருவதாக விஜய் மிஸ்ராவின் வழக்கறிஞர் தெரிவித்தார். தொடர்ந்து வழக்கு தொடர்பாக விசாரிக்க இன்று நேரில் ஆஜராகுமாறு ராகுல்காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதன்படி சுல்தான்பூர் நீதிமன்றத்தில் அவர் நேரில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிகிறது எனக்கூறியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் எம்.பி பதவியை இழந்த ராகுல், உச்சநீதிமன்றம் சென்று பதவியை மீட்டெடுத்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?