பக்கா ப்ளானுடன் வெடிகுண்டோடு ஒரு வாக்? பெங்களூரு குண்டுவெடிப்பு… சந்தேக நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு !!
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவக குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
பெங்களூரு குண்டனஹல்லி பகுதியில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேவில் முன்னதாக குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. 10 நொடிகள் இடைவெளியில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்ததாக கூறப்படும் நிலையில், ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து குண்டுவெடிப்பு சம்பவத்தில் உணவகத்தில் இருந்த 3 ஊழியர்கள், 6 வாடிக்கையாளர்கள் என 9 பேர் படுகாயமடைந்தனர்.
சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பத்தில் ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், திடீரென உணவகத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்த சிசிடிவி காட்சிகள் மூலம் வெடித்தது சிலிண்டர் அல்ல, வெடிகுண்டு என்பது உறுதி செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், CBI உதவியும் கோரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ராமேஸ்வரம் கஃபேயில் ரவா இட்லி வாங்கச் சென்ற நபர், தனது 2 வெடிகுண்டுகளுடன் பையை உணவகத்திலேயே வைத்து விட்டுச் சென்றதாகவும், அவர் சென்ற அடுத்த 1 மணி நேரத்தில் வெடிகுண்டுகள் வெடித்ததாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கில் சந்தேகிக்கப்படும் நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பையில் வெடிகுண்டு வைத்துச் செல்லும் வகையில் காட்சிகள் உள்ள நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 30 முதல் 35 வயது இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?