அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நல்ல செய்தி கூறிய உச்சநீதிமன்றம்.. மே 7-க்காக காத்திருக்கிறது ஆம்ஆத்மி..
மக்களவைத் தேர்தலை கருத்தில்கொண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டு புதிய மதுபானக் கொள்கை அமல்படுத்தப்பட்டபோது, ரூ.1000 கோடி ஊழல் நடந்ததாக பாஜக குற்றம்சாட்டியது. தொடர்ந்து மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் உள்ளிட்ட ஆம்ஆத்மி தலைவர்களை அமலாக்கத்துறை, வருமானவரித்துறை கைதுசெய்து விசாரித்து வந்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த மார்ச் 21ம் தேதி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. தொடர்ந்து இவரது ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பாக இருதரப்பு வாதங்களும் நாள்தோறும் என்ற அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, அனைத்து சம்மன்களுக்கும் பதிலளித்தபோதும் எந்த ஆதாரமும் இன்றி சட்டவிரோதமாக கெஜ்ரிவாலை ED கைது செய்ததாக வாதிட்டார். இதைத்தொடர்ந்து ED தரப்பில் வாதிட்ட கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ, வழக்கில் தலையிட முடியாது என டெல்லி நீதிமன்றம் கூறிய பிறகே சட்டவிதிகளை பின்பற்றி கெஜ்ரிவாலை ED கைது செய்ததாக் கூறினார்.
இதையடுத்து பேசிய நீதிபதி, வழக்கு தொடர்பான பல்வேறு அம்சங்களை ஆராய காலஅவகாசம் ஆகும் என தெரிவித்தார். எனவே காலம் ஆகும் என்பதை கருத்தில்கொண்டு தேர்தலை முன்னிட்டு கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க பரிசீலிக்கலாம் எனவும் அவர் கூறினார். இதுதொடர்பாக 7ம் தேதி முடிவெடுப்பதாகவும் இருதரப்பும் தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
What's Your Reaction?