'ஜனநாயகன்'  சென்சார் சர்டிபிகேட் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை 

விஜயின் 'ஜனநாயகன்'  திரைப்படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் வழங்கக்கோரி தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளதாக தெரிகிறது. 

'ஜனநாயகன்'  சென்சார் சர்டிபிகேட் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை 
'Jananayakan' censor certificate case

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் கடந்த 9 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. தவெக எனும் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜயின் கடைசி படம் இது என்பதால் அவரது ரசிகர்கள் உள்பட அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். இந்த நிலையில் ஜனநாயகன் படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

ரத்தக்காட்சிகள் அதிக அளவில் இடம் பெற்று இருந்ததால்,  படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகக் கூறி மறு தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் படத் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த தனி நீதிபதி பி.டி. ஆஷா, ஜனநாயகன் படத்துக்கு U/A தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.

இதற்கு எதிராக தணிக்கை வாரியம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி பி.டி. ஆஷா பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தனர். மேலும் 21-ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால், திட்டமிட்டபடி ஜனநாயகன் திரைப்படம் வெளியாகவில்லை.

இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஜனநாயகன் படத் தயாரிப்பு நிறுவனம் கடந்த சனிக்கிழமை மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு அவசர வழக்காக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை நீதிமன்றம் ஏதாவது ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக உத்தரவு பிறப்பித்தால், பொங்கல் தினத்தன்று படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow