நாளை +2 ரிசல்ட்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை...
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நாளை காலை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வுகள், கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது. 3,324 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை 4.17 லட்சம் மாணவர்கள், 4.33 லட்சம் மாணவிகள், 23747 தனித் தேர்வர்கள் என மொத்தம் 8.65 லட்சம் பேர் எழுதினர். இந்தாண்டு ஒவ்வொரு தேர்விலும், பல்வேறு காரணங்களால் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் கலந்துகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள், ஏப்ரல் 10ம் தேதி தொடங்கி, 21ம் தேதி வரை நடைபெற்றது. இதில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு விடைத்தாள் திருத்தும் அறைக்குள் செல்போன் எடுத்துவரக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு இருந்தன. இதனிடையே, பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மே 5ஆம் தேதி வெளியிடுவதற்கு திட்டமிட்டிருந்த பள்ளிக்கல்வித்துறை, நீட் தேர்வை கருத்தில் கொண்டு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடுவதை மே 6ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.
அதன்படி, நாளை காலை 9.30 மணியளவில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இணையத்தில், வெளியிடுகிறார். www.dge.tn.gov.in www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in,www.dge2.tn.nic.in என்ற இணைய முகவரியில், மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தாங்கள் கொடுத்துள்ள அலைபேசி எண்ணுக்கு, குறுஞ்செய்தி வாயிலாகவும் தேர்வு முடிவுகளை அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அந்தந்த பள்ளிகள் நாளைய தினமே (மே 6) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
What's Your Reaction?