தேர்தலுக்கு ஜரூராக தயாராகும் தமிழ்நாடு.. மொத்தமாகக் களமிறங்கும் துணை ராணுவம்..! இத்தனை ஏற்பாடுகளா?
பதற்றமான வாக்குச்சாவடிகளில் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
ஒரு சில வாரங்களில் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம், இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.
தொடர்ந்து கூட்ட முடிவுகள் தொடர்பாக தகவல் தெரிவித்த தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தேர்தல் பாதுகாப்புப் பணியில் தமிழ்நாட்டில் 200 கம்பெனி துணை ராணுவ படையினர் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தார். மார்ச் முதல் வாரம் முதல் இரண்டு கட்டங்களாக துணை ராணுவப்படையினர் தமிழ்நாடு வரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக முதற்கட்டமாகவும், அறிவிப்புக்குப்பின் 2ம் கட்டமாகவும் துணை ராணுவப்படையினர் வருகை தரவுள்ளதாகவும் அவர் கூறினார். அதன்படி பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தலுக்கு முன்பாகவே பாதுகாப்புப்பணி நடைபெறும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
What's Your Reaction?