ஜனநாயகன் பட சென்சார் சான்றிதழ் தரக்கோரிய வழக்கு: உயர்நீதி மன்றம் தள்ளுபடி
விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்ககோரியது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி கடந்த ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், சில காட்சிகள் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி சான்றிதழ் வழங்குவதை தணிக்கை வாரியம் நிறுத்தி வைத்தது.
இதனைத் தொடர்ந்து, சென்னை உயா் நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன் தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, ‘ஜனநாயகன்’ படத்தை மறுஆய்வுக் குழு பாா்வையிட பரிந்துரை செய்த தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா். ஜனநாயகன் படத்துக்கு உடனடியாக தணிக்கைச் சான்று வழங்கவும் உத்தரவிட்டாா்.
தனிநீதிபதியின் உத்தரவை எதிா்த்து மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் உடனடியாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இதனிடையே, உச்ச நீதிமன்றத்தை படக்குழு நாடிய நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்கும் தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தார். மேலும், தணிக்கை வாரியத்துக்கு உரிய கால அவகாசம் அளித்து வழக்கை மீண்டும் விசாரிக்க தனிநீதிபதி பி.டி. ஆஷாவுக்கு உத்தரவிட்டனர்.
இதனை தொடர்ந்து, 'ஜனநாயகன்' படத்திற்கு விரைந்து தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கை பட தயாரிப்பு நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவித்தது.
மீண்டும் நீதிமன்றம் சென்றால் தணிக்கை சான்றிதழ் கிடைக்க மேலும் தாமதமாகும் என்பதால், திரைப்படத்தை மறு தணிக்கைக்கு அனுப்ப தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்த வழக்கு வாபஸ் பெறப்படுகிறது. இதன்மூலம் தணிக்கை வாரியம் மூலமாகவே இப்பிரச்சனையை முடிக்க படக்குழு இந்த முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், 'ஜனநாயகன்' படத்திற்கு தணிக்கை சான்று கோரிய மனுவை வாபஸ் பெற தயாரிப்பு நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 'ஜனநாயகன்' படத்தை தயாரித்த நிறுவனம் வழக்கை வாபஸ் பெற விரும்பியதால் அதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து படக்குழு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
What's Your Reaction?

