புதிய அமைச்சர்களுக்கு எந்தெந்த இலாகாக்கள்? மூத்த நிர்வாகிகளோடு முதலமைச்சர் ஆலோசனை!
தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்படுவதையொட்டி கட்சியின் மூத்த நிர்வாகிகளோடு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில் அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது.
அதில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பும், பிணையில் வெளிவந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஏற்கனவே அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்த ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. திருவிடைமருதூர் எம்எல்ஏ கோவி.செழியன், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் புதிதாக இடம்பெறுகின்றனர்.
அதேபோல் சில அமைச்சர்களுக்கு இலாகாக்கள் மாற்றமும் செய்யப்பட்டுள்ளன. அதன்படி உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி வனத்துறையும், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கும், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி மனித வளத்துறைக்கும், வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பனுக்கு பால்வள தறையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர்களாக இருந்த செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவை பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இன்று மாலை துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்க உள்ள நிலையில், அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள மூன்று அமைச்சர்களுக்கு எந்தெந்த இலாகாக்கள் வழங்கலாம் என்பது குறித்து மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
சிறையில் இருந்து ஜாமினில் வெளியில் வந்துள்ள செந்தில்பாலாஜிக்கு மீண்டும் மின்சாரத்துறையே வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?