Jayam Ravi: ஜெயம் ரவி – ஆர்த்தி ஜோடி விவாகரத்து..? இன்ஸ்டாவில் வெளியான உண்மை!
ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அதன் உண்மை என்னவென்று தற்போது தெரியவந்துள்ளது.
சென்னை: கோலிவுட்டின் முன்னணி ஹீரோவான ஜெயம் ரவி, அவரது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஜெயம் படத்தில் ஹீரோவாக அறிமுகமான ஜெயம் ரவி, எம் குமரன் சன் ஆஃப் மஹாலட்சுமி, சம்திங் சம்திங், தனி ஒருவன் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில், ராஜராஜ சோழனாக நடித்ததன் மூலம் பான் இந்தியா அளவில் பிரபலமானார். இதனையடுத்து தமிழில் ஜீனி, காதலிக்க நேரமில்லை, ப்ரதர் என பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ஜெயம் ரவி.
இந்த நிலையில், தனது மனைவி ஆர்த்தியை ஜெயம் ரவி விவாகரத்து செய்யவிருப்பதாக வெளியான தகவல், ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 2009 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதாவின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஜெயம் ரவி. 15 ஆண்டுகளாக க்யூட்டான ஜோடியாக வாழ்க்கை நடத்தி வரும் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தீபாவளி, பொங்கல் என பண்டிகை தினங்களில் ஃபேமிலி போட்டோவை ஷேர் செய்து ரசிகர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட வெளிநாட்டிற்கு டூர் சென்றிருந்த புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்திருந்தனர்.
இதனிடையே ஜெயம் ரவிக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே அடிக்கடி பிரச்சினைகள் வருவதாகவும், அதனால் இருவரும் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், மனநல மருத்துவரும் பாடகியுமான ஒருவருடன் ஜெயம் ரவிக்கு நெருக்கம் ஏற்பட்டதாகவும், இது தான் ஆர்த்தியை அவர் பிரிய முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்பட்டது. இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றம் வரை சென்றுவிட்டதாக அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இது தொடர்பான தகவல் கேட்பதற்காக ஆர்த்தியின் அம்மா சுஜாதாவை தொடர்பு கொண்ட போது, அவர் பேச மறுத்துவிட்டார்.
அதேநேரம் இந்த தகவல்கள் உண்மையில்லை என்பதாக, தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை ஸ்டேட்டஸ்டில் வைத்துள்ளார் ஆர்த்தி. அதில், ஜெயம் திரைப்படம் வெளியாகி 21 வருடங்கள் ஆனதைக் கொண்டாடும் வகையில், அந்தப் படத்தின் போஸ்டரை பகிர்ந்துள்ளார். முக்கியமாக அந்த ஸ்டோரியில், “காதல் என்னும் வார்த்தை அது வார்த்தை இல்லை வாழ்க்கை” ,#21yearaofjayam என்று ஹேஷ்டாக் உடன் பதிவிட்டுள்ளார். இதன் மூலம், தனது விவாகரத்து குறித்து கிளம்பிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஆர்த்தி. ஆனாலும் ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து அறிவிப்பை போல, ஜெயம் ரவியும் ஆர்த்தியும் திடீரென அதிர்ச்சி கொடுக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோலிவுட்டில் நட்சத்திரத் தம்பதிகளின் விவாகரத்து எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. தனுஷ் – ஐஸ்வர்யா, சமந்தா – நாக சைதன்யா, ஜிவி பிரகாஷ் – சைந்தவி என நம்பவே முடியாத விவாகரத்து சம்பவங்களின் வரிசையில், ஜெயம் ரவியும் ஆர்த்தியும் இணைந்திடக் கூடாது என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. ஆனாலும் இந்தச் சம்பவத்தின் உண்மை குறித்து இப்போதைக்கு எதுவும் உறுதி இல்லை என்றே தெரிகிறது.
What's Your Reaction?