Simbu: காமெடி நடிகர் வெங்கல் ராவ்-ஐ கண்டுகொள்ளாத வடிவேலு... உடனே உதவி செய்த சிம்பு!

பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ் மருத்துவ சிகிச்சைக்காக 2 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியுள்ளார் சிலம்பரசன்.

Jun 26, 2024 - 16:38
Simbu: காமெடி நடிகர் வெங்கல் ராவ்-ஐ கண்டுகொள்ளாத வடிவேலு... உடனே உதவி செய்த சிம்பு!

சென்னை: வடிவேலுவுடன் பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளவர் வெங்கல் ராவ். வடிவேலுவின் கூட்டணியில் மிக முக்கியமான ஆர்ட்டிஸ்ட்டாக வலம் வந்தார். இந்நிலையில், உடல்நலப் பிரச்சினை காரணமாக நடிக்க முடியாமல் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார் வெங்கல் ராவ். ஆந்திராவில் உள்ள தனது வீட்டில் வசித்து வரும் வெங்கல் ராவ், மருத்துவ சிகிச்சைக்காக பண உதவி தேவை என வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், தனது ஒரு கையும் காலும் செயலிழந்து விட்டதாகவும், இதற்கு சிகிச்சை எடுக்க பணமில்லாமல் கஷ்டப்படுவதாகவும் கூறியிருந்தார்.

மேலும், திரையுலகைச் சேர்ந்தவர்கள் தனக்கு உதவுமாறும் கோரிக்கை விடுத்திருந்தார். வெங்கல் ராவ் உதவி கேட்டு பேசியிருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இவரை போல தான், மறைந்த காமெடி நடிகர் போண்டா மணியும் அவரது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டிருந்த போது, சினிமா பிரபலங்களிடம் உதவி கேட்டிருந்தார். அப்போது சிலர் மட்டுமே உதவி செய்திருந்தாலும், ஒருகட்டத்தில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். முக்கியமாக போண்டா மணியும் தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள வெங்கல் ராவ்வும் வடிவேலுவுடன் அதிக படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போண்டா மணிக்கு வடிவேலு உதவவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் வடிவேலுவை பலரும் விமர்சித்திருந்தனர். தற்போது வெங்கல் ராவ் விவகாரத்திலும் வடிவேலு மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த முறையாவது அவர் தன்னுடன் நடித்த நடிகருக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கூறி வந்தனர். இந்நிலையில், காமெடி நடிகர் வெங்கல் ராவ் சிகிச்சைக்கு கோலிவுட்டின் முன்னணி ஹீரோ சிம்பு உதவி செய்துள்ளார். அதன்படி ஆந்திராவில் சிகிச்சை எடுத்துவரும் வெங்கல் ராவ்க்கு, 2 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளாராம் சிம்பு. இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

மாநாடு வெற்றியைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல என அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்தார் சிம்பு. தற்போது கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக STR 48, சுதா கொங்கரா இயக்கும் படங்களில் சிம்பு நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow