மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு... நாளை தீர்ப்பு...
நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட, கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்த முயற்சித்து சிக்கிய பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் நாளை (26-04-2024) தீர்ப்பு வெளியாகிறது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்தவர் நிர்மலா தேவி. இவர் மீது, அதே கல்லூரியில் படித்த மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக 2018-ம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நிர்மலா தேவி, மதுரை காமராஜ் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை அருப்புக்கோட்டை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
11 மாத சிறைவாசத்திற்கு பின்னர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி நிர்மலா தேவி நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார். தொடர்ந்து முருகன், கருப்பசாமி உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தனர்.
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில், நீதிபதி பகவதி அம்மாள் முன்னிலையில் நடைபெற்று வந்தது. 100-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு நாளை (26-04-2024) வெளியாகிறது
What's Your Reaction?