கென்யாவை மிரட்டும் கனமழை.. 40 பேர் பலியான சோகம்.. வீடுகளை இழந்த ஒன்றரை லட்சம் மக்கள்
கென்யாவில் அதி கனமழை பெய்து வருவதால் 40 பேர் உயிரிழந்துள்ளனர். பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் ஒன்றரை லட்சம் மக்கள் வீடுகளை இழந்து நிற்கதியாக நிற்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக தலைநகரே வெள்ளத்தில் மிதக்கிறது. முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் இயல்புநிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் குடியிருப்புகளை மூழ்கடித்துள்ளதால் கிட்டதட்ட ஒன்றரை லட்சம் மக்கள் வீடுகளை இழந்து நிற்கதியாக நிற்கின்றனர். குறிப்பாக நைரோபி நகரில் உள்ள மாதாரே குடிசைப் பகுதிகளில் திடீரென வெள்ள நீர் புகுந்ததால், நூற்றுக்கணக்கான குடிசைகள் அப்படியே வெள்ளநீரில் அடித்துச்செல்லப்பட்டன. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் 6 பேர் காணாமல் போயிருப்பதாகவும் பேரிடர் மீட்பு படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் முழுவீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்றாலும், மக்களின் வாழ்வாதாரம் அதளபாதத்தில் விழுந்திருப்பது அந்நாட்டு மக்களை வேதனையடைய வைத்துள்ளது. இதனிடையே, எதிர்பாரத மழையை எதிர்கொள்ள முடியாமல், உதவி கோரி கென்யா அரசு உலகநாடுகளை கேட்டுக்கொண்டுள்ளது. தொடர்ந்து ஐநா சார்பாகவும் உதவிப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.
காலநிலை மாற்றத்தின் முக்கிய பிரச்சனையாக பூதாகரம் அடைந்துள்ள எல் நினோ தான் இந்த பெருமழைக்கு காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்த மழையால், கென்யா மட்டுமில்லாமல், 23 ஆப்பிரிக்க நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. கென்யாவை தொடர்ந்து தான்சானியா நாட்டிலும் 58 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடதக்கது.
இந்த கொடூரமான மழை 1997 மற்றும் 1998களில் பெய்த பெருமழையைப் போல் இருப்பதாக தெரிவிக்கும் ஆய்வாளர்கள். அப்போது ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 6ஆயிரம் உயிர்களை கபளீகரம் செய்ததை சுட்டிக்காட்டி, காலநிலை மாற்றத்தை ஒரு சீரியஸ் பிரச்சனையாக உலகநாடுகள் கையாள வேண்டும் என வலியுறுத்தினர்.
What's Your Reaction?