சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜரான விஜயபாஸ்கர்...  அமலாக்கத்துறைக்கு ஆவணங்களை தர முடியாது என லஞ்ச ஒழிப்புத்துறை (பிடி)வாதம்...

Apr 25, 2024 - 18:28
சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜரான விஜயபாஸ்கர்...  அமலாக்கத்துறைக்கு ஆவணங்களை தர முடியாது என லஞ்ச ஒழிப்புத்துறை (பிடி)வாதம்...

சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்காக, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் விஜயபாஸ்கர். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 54% சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் மீது புதுக்கோட்டை ஊழல் தடுப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதன் அடிப்படையில் கடந்த 2021-ம் ஆண்டு விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட 56 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில், ரூ.23 லட்சம் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 3.75 கிலோ வெள்ளிப் பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.

தொடர்ந்து, கடந்த ஆண்டு மே மாதம் 216 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நகல்கள் மற்றும் அதற்குரிய ஆதாரங்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று (25-04-2024) விசாரணைக்கு வந்தது. இதற்காக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ஆஜராகினர்.

அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், சொத்துக் குவிப்பு வழக்கில், விசாரணை நடைபெற்று வருவதால் ஆவணங்களை அமலாக்கத்துறைக்கு வழங்க முடியாது என வாதிடப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் மீதான விசாரணையை ஜூன் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow