வடக்கு வாழ்கிறது..தெற்கு தேய்கிறது..! ரூ.1க்கு வெறும் 29 பைசாதான் கிடைக்குது! கொந்தளித்த கனிமொழி !

Feb 15, 2024 - 21:02
Feb 15, 2024 - 21:11
வடக்கு வாழ்கிறது..தெற்கு தேய்கிறது..! ரூ.1க்கு வெறும் 29 பைசாதான் கிடைக்குது! கொந்தளித்த கனிமொழி !

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது என மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் புகழ்வாய்ந்த கருத்தை குறிப்பிட்டுள்ள திமுக எம்பி கனிமொழி,  தமிழ்நாடு வரியாக செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் மத்திய அரசு வெறும் 29 பைசா மட்டுமே திரும்ப தருவதாக ட்வீட் செய்துள்ளார். 

வெள்ள நிவாரண நிதி, மாநிலத்திற்கான நிதி பகிர்வில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதாக தமிழக அரசு தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. இதற்கான டெல்லியில் திமுக எம்பிக்கள் பதாகைகள் ஏந்தியும் போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். 

இதற்கிடையே நிதி பங்கீடு குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும் போது, "தமிழ்நாட்டுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு எதுவுமே செய்வது இல்லை சொல்கின்றனர்.நாங்கள் வழங்கும் வரியைதான் கோருகிறோம், என கூறுபவர்களுக்கு சிலவற்றை சொல்ல விரும்புகிறேன். மாநில அரசுகள் வழங்கும் வரியில் இருந்து பெறப்படும் தொகையைதான் மத்திய அரசு பங்கிட்டு வழங்குகிறது. வந்தே பாரத் ரயில் தயாரிப்பு தமிழகத்திற்கு கொடுத்தது, ரூ.1,260 கோடி ரூபாயில் சென்னையில் புதிய விமான முனையம், மெட்ரோ ரயில், உள்ளிட்ட  திட்டங்களை தாங்கள் செயல்படுத்தி வருகிறோம் என தெரிவித்தார். 

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,  "மாநிலங்களின் நலனை காக்கும் பொறுப்பில் உள்ள மத்திய அரசு,  தமிழ்நாட்டு மக்களுக்கு செய்தது என்ன?," என கேள்வி எழுப்பினார். இதேபோல் அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விசிக தலைவர் திருமாவளாவன், மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மத்திய அரசு மீது இதே குற்றச்சாட்டை முன்வைத்தனர். 

இதற்கு ஒரு படியாக மேலே சென்று செங்கல்பட்டு மாவட்ட திமுகவினர், பொதுமக்களுக்கு அல்வா கொடுத்தும், மத்திய அரசு ஒதுக்கிய நிதி குறித்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி அவரது எக்ஸ் தள பக்கத்தில், தமிழக அரசு கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும், வெறும் 29 பைசாவை மட்டுமே மத்திய அரசு தருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் புகழ்பெற்ற கருத்தான " வடக்கு வாழ்கிறது..தெற்கு தேய்கிறது"  என்பதை சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow