தேர்தல் பத்திரம்..! தீர்ப்பை வரவேற்ற எதிர்கட்சிகள்.. கோடிகளை அள்ளிய திமுக, காங்., முழு பட்டியல் இதோ..!

Feb 15, 2024 - 21:24
Feb 15, 2024 - 21:31
தேர்தல் பத்திரம்..! தீர்ப்பை வரவேற்ற எதிர்கட்சிகள்.. கோடிகளை அள்ளிய திமுக, காங்., முழு பட்டியல் இதோ..!

தேர்தல் பத்திர திட்டம் ரத்து செய்யப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு பல்வேறு எதிர்க் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி ஆயிரத்து 123 கோடி ரூபாயும், திமுக 617 கோடி ரூபாயும் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி மூலம் தேர்தல் பத்திரங்களைப் பெற்று, விருப்பப்படும் அரசியல் கட்சிகளுக்கு தனிநபராகவோ, கார்ப்பரேட் நிறுவனமாகவோ நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகள் வரவேற்றுள்ளன.

வரலாற்றுச்சிறப்பு மிக்க தீர்ப்பு என காங்கிரஸ் அறிவித்துள்ள நிலையில், ஜனநாயகத்தின் சமநிலையை மீட்டெடுத்த தீர்ப்பு என முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட நன்கொடைகளின் தகவல்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.

முன்னதாக 2016-17 மற்றும் 2021-22 க்கு இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் மொத்தம் ஏழு தேசியக் கட்சிகளும் 24 பிராந்தியக் கட்சிகளும் மொத்தம் ரூ.12,000 கோடிக்கும் மேல் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் ரூ.6,565 கோடி ரூபாய் பெற்ற பாஜக, மொத்த தொகையில் 57 சதவீதத்தைக் கைப்பற்றியுள்ளது. ரூ.1123 கோடியைப் பெற்று 10 சதவீத நிதியை காங்கிரஸ் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ரூ.1093 கோடியுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, ரூ.744 கோடியுடன் BJD உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதைத்தொடர்ந்து 617 கோடி ரூபாய் நன்கொடையைப் பெற்று 5வது இடத்தில் திமுக உள்ளது தெரிய வந்துள்ளது. 

தொடர்ந்து TRS-YSRC கட்சிகள் ரூ.383 கோடியும், TDP கட்சிய ரூ.146 கோடியும், SHS கட்சி ரூ.101 கோடியும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், NCP கட்சி 51 கோடி ரூபாயும் ஆம்ஆத்மி கட்சி 48 ரூபாயும், ஐக்கிய ஜனதா தள கட்சி 24 கோடி ரூபாயும் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் பத்திரத்தின் மூலம் அதிமுக 6 கோடி ரூபாய் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறாக தேர்தல் பத்திரத் தீர்ப்பை முதன்முதலாக வரவேற்ற காங்கிரஸ் ஆயிரத்து 123 கோடி ரூபாயும் திமுக 617 கோடி ரூபாயும் தேர்தல் பத்திரத்தின் மூலம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow