கேரள நடிகை பாலியல் வழக்கு: நடிகர் தீலிப் விடுதலை எர்ணகுளம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
கேரள நடிகை காரில் பாலியல் பலாத்காரம் செய்ய வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்து எர்ணாகுளம் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கேரளாவில் கடந்த 2017ம் ஆண்டு நாட்டையே உலுக்கிய ஒரு சம்பவம் நடைபெற்றது. 2017 பிப்ரவரி 17ம் தேதி கொச்சியில் ஓடும் காரில் பிரபல நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
திருச்சூரிலிருந்து கொச்சிக்குச் செல்லும்போது அந்த நடிகையை ஆறு நபர்கள் கடத்தியுள்ளனர். பல்சர் சுனில் என்ற நபர் நடிகையைப் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இதை வீடியோவாக எடுத்து பிளாக்மெயில் செய்யவும் பல்சர் சுனில் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
காரில் கடத்தப்பட்ட அந்த நடிகை, இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு ஒரு இயக்குநர் வீட்டின் அருகே விடப்பட்டார். அன்றைய தினமே அந்த நடிகை போலீஸ் நிலையத்திற்குச் சென்று புகாரளித்தார். அதன்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை ஆரம்பித்தது.
வழக்கில் திடீர் திருப்பமாக பல்சர் சுனில் தானாகவே முன்வந்து சரணடைந்து முக்கியக் குற்றவாளியானார். செல்போன் பதிவுகள் அடிப்படையில் நடந்த விசாரணையில் மற்ற குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்தச் சம்பவத்தில் பிரபல மலையாள நடிகர் திலீப்பிற்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக 2017 ஜூலை 10ம் தேதி திலீப்பும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவர் 8வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். குற்றச் சதி, கடத்தல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது பதியப்பட்டது. ஐடி சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடிகர் திலீப் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 2020 ஆம் ஆண்டில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதுவரை 1600 ஆவணங்கள், 280 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தான் வழக்கில் எர்ணாகுளம் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தீர்ப்பை அடுத்து எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். காலை 11 மணிக்கு நீதிபதி தீர்ப்பை வாசிக்க தொடங்கினர். அதில் பல்சர் சுனில் உள்பட 6 பேரை குற்றவாளிகள் என அறிவித்தது.
நடிகர் திலீப் எதிராக எந்த முகாந்திரமும் இல்லை என்பதால், அவரை விடுதலை செய்து எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 8 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.
What's Your Reaction?

