கெஜ்ரிவாலின் உடல்நிலையை மோசமாக்க முயற்சி... மத்திய அரசு மீது அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு
மத்திய அரசு அமலாக்கத்துறை உதவியுடன் அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலையை மோசமாக்க முயற்சிப்பதாக டெல்லி அமைச்சர் அதிஷி குற்றஞ்சாட்டியுள்ளார்.
டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அம்மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ததை தொடர்ந்து, அவரை கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்தது. திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால் கடந்த 15-ம் தேதி காணொலி மூலம் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று ஏப்ரல் 23-ம் தேதி வரை அவரின் நீதிமன்றம் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கெஜ்ரிவால் சார்பில், ரத்த அளவை தொடர்ச்சியாக கண்காணிக்க மற்றும் மருத்துவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு இன்று (18-04-2024) விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத்துறை தரப்பில், "ஜாமீன் கிடைப்பதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுமென்றே ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க முயற்சி செய்கிறார். தினமும் மாம்பழங்கள், இனிப்பு கலந்த தேநீர் மற்றும் இனிப்பு வகைகளை அதிகம் எடுத்துக் கொள்கிறார். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிட்டதாக கூறி ஜாமீன் பெறும் நோக்கில் இவ்வாறு செய்கிறார்" என வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து கெஜ்ரிவாலின் உடல்நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டு விசாரணை ஏப்ரல் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், அமைச்சருமான அதிஷி, "அரவிந்த் கெஜ்ரிவால் தனது சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நாள்தோறும் 54 யூனிட் இன்சுலின் எடுத்துக்கொள்கிறார். கடுமையான சர்க்கரை நோயாளிகள் தான் இத்தனை யூனிட் இன்சுலின் எடுத்துக் கொள்கிறார்கள். சர்க்கரை நோயாளிகள் என்ன உணவு சாப்பிடுகிறார்கள்? எந்த உடற்பயிற்சி செய்கிறார்கள் என அனைத்தும் முக்கியமானவை என்பதால் தான் அவருக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் மத்திய அரசு, அமலாக்கத்துறை உதவியுடன் கெஜ்ரிவாலின் உடல்நிலையை மோசமாக்க முயற்சிக்கிறது. அவர் இனிப்பு சாப்பிடுவதாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் கூறியது அப்பட்டமான பொய்" என தெரிவித்தார்.
What's Your Reaction?