பாஜகவுடன் கூட்டணி வைக்க முனைப்பு காட்டும் முன்னணி கட்சிகள் - விரைவில் அறிவிப்பு?
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதை உறுதி செய்யும் வகையில், த.மா.கா, ஐ.ஜே.கே மற்றும் புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனனை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேசினர்.
மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் கட்சிகள் இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆளும் திமுக, அதன் கூட்டணி கட்சிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. அதன்படி இந்திய முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமதாதபுரம் தொகுதியையும் , கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியையும் ஒதுக்குவதற்கான உடன்படிக்கை இருதரப்பிலும் கையெழுத்தானது. இதுபோக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடனும் திமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
இதனிடையே தேமுதிக, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சியான அதிமுக, நாடளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க,தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவந்த நிலையில், தற்போது அவர் பாஜகவுடன் கூட்டணி வைக்க முனைப்பு காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக பாஜக மூத்த தலைவர்களையும் ஜி.கே.வாசன் தொடர்ந்து சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில், பாஜக மேலிடப்பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஜி.கே.வாசனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, பாஜகவுடன், தமாகா கூட்டணி வைப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல், பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனனை சந்தித்த புதிய நிதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், பாஜகவின் தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி போட்டியிடும் என அறிவித்துள்ளார்.
இதனிடையே ராமாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஐ.ஜே.கே எம்.பி பாரிவேந்தர், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தான் பாஜகவில் உள்ளதாகவும், இந்தியா வலுப்பெற மீண்டும் மோடியின் கைகளை முழு பெற செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் பெரம்பலூர் தொகுதியிலேயே தாம் போட்டியிடவுள்ளதாக தெரிவித்த பாரிவேந்தர், இந்த முறை இந்திய ஜனநாயக கட்சிக்கு கூடுதலாக கள்ளக்குறிச்சி தொகுதியை கேட்க உள்ளதாக கூறினார்.
What's Your Reaction?