வறுமையை முற்றிலும் ஒழிக்க உறுதி ஏற்போம்..கருணையுடன் ஆட்சி நடத்துவோம்.. மோடி உறுதி
அனைத்து எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைக் காப்பாற்ற வேண்டும். நாட்டுக்கு சேவையும் 140 கோடி மக்களின் கனவை நனவாக்கவும் எம்பிக்கள் பாடுபட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.நாட்டில் இருந்து வறுமையை முற்றிலும் ஒழிக்க உறுதி ஏற்போம் என்று கூறிய பிரதமர் மோடி,கடமை, செயல்பாடு மற்றும் கருணையுடன் எமது ஆட்சி நடைபெறும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
18வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களைக் கைப்பற்றி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றது. 240 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தது. எனினும், தனிப்பெரும்பான்மை (272) கிடைக்காததால், தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் பாஜக ஆட்சியமைத்தது.
பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி கடந்த ஜூன் 9ஆம் தேதி பதவியேற்றார்.இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் 18வது மக்களவை கூட்டத் தொடர் இன்று காலையில் தொடங்கியது. எம்.பியாக பதவி ஏற்கும் முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,” இந்திய ஜனநாயகத்தில் இன்று புதிய தொடக்கம். புதிய எம்.பி.க்கள் அனைவரையும் வரவேற்கிறேன்; அவர்களுக்கு வாழ்த்துகள்.புதிய உத்வேகம், புதிய உற்சாகத்துடன் பணிகளை தொடங்க வேண்டிய பணி நம் முன் இருக்கிறது. நாடாளுமன்றக் கூட்டம் சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும்.
சுதந்திரத்திற்கு பிறகு முதல்முறையாக புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் பதவியேற்பு விழா நடக்கிறது. இந்நாளை கொண்டாடும் வாய்ப்பை நாடாளுமன்ற வளாகம் பெற்றுத் திகழ்கிறது. எங்கள் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக மக்கள் எங்களுக்கு 3வது முறையாக வாய்ப்பு வழங்கியுள்ளனர். 68 கோடி மக்கள் தேர்தலில் வாக்களித்து சாதனை படைத்துள்ளனர். உலகின் மிகப்பெரிய தேர்தல் பெருமைக்குரிய வகையில் நிறைவு பெற்றிருப்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை அளிக்கும் விஷயம்.
ஆட்சியை வழிநடத்த பெரும்பான்மை முக்கியம்; நாடாளுமன்றத்தை வழிநடத்த ஒத்துழைப்பு அவசியம். அனைத்து எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைக் காப்பாற்ற வேண்டும். நாட்டுக்கு சேவையும் 140 கோடி மக்களின் கனவை நனவாக்கவும் எம்பிக்கள் பாடுபட வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு நிலையான ஆட்சி முக்கியம். இந்த மக்களவையில் இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. 3ஆவது முறையாக பிரதமராகி இருக்கிறேன், அனைத்து திட்டங்களுக்கும் 3 மடங்கு முக்கியத்துவம் வழங்கப்படும். 2 முறை அரசை வழிநடத்திய அனுபவம் எங்களுக்கு உள்ளது.
2047ஆம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற கனவை நிறைவேற்றும் வகையில் செயல்படுவோம். நாட்டில் இருந்து வறுமையை முற்றிலும் ஒழிக்க உறுதி ஏற்போம்.140 கோடி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான உழைப்பை முழுமையாக தருவோம். கடமை, செயல்பாடு மற்றும் கருணையுடன் எமது ஆட்சி நடைபெறும். எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட ஜூன் 25ம் தேதி ஒரு கறுப்பு தினம். நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தி 50 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் ஜனநாயகத்தை காக்க நாம் முழுமையாக முயற்சிப்போம்” இவ்வாறு பேசினார்.
இதனிடையே ஜனாதிபதி மாளிகையில் ஒடிஷா பாஜகவைச் சேர்ந்த 7 முறை எம்பியான பர்த்ருஹரி மகதாப்புக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு தற்காலிக சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் எம்.பிக்களாக பதவியேற்றனர். 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கி ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதேபோல், மாநிலங்களவையின் 264வது அமர்வு ஜூன் 27ஆம் தேதி தொடங்கி ஜூலை 3 வரை நடைபெறவிருக்கிறது. ஜூன் 27ஆம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?