பற்றி எரியும் கள்ளக்குறிச்சி.. பதவி விலகுங்கள் ஸ்டாலின்..கொந்தளித்த எடப்பாடி பழனிச்சாமி
அடக்குமுறைகளை ஏவி விட்டு எங்களை அடக்க முடியாது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். கள்ளச்சாராய மரணங்களுக்கு சிபிஐ விசாரணை தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணத்தை தடுக்க தவறிய ஆளும் திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் ஆர்பாட்டத்தில்ர ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சியில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் கள்ளச்சாரய புழக்கத்தை கட்டுபடுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் அருத்தியதால் பலர் பலியான சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவி விலக கோரியும் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பாக இன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது.
கடந்த 19ஆம்தேதி கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்தவர்கள் இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் சட்டசபையிலும் எதிரொலித்தது. அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். சபாநாயகர் அதற்கு அனுமதி மறுக்கவே சட்டசபையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கள்ளகுறிச்சியில் ஆர்பாட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுவதாக குற்றம் சாட்டினார். கள்ளச்சாராய மரணத்திற்கு ஒருநபர் ஆணையம் வைத்தால் நியாயம் கிடைக்காது. எனவேதான் நாங்கள் சிபிஐ விசாரணை கேட்கிறோம்.
40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஆணவத்தில் ஆடுகின்றனர். எதையும் கண்டுகொள்ளாமல் விட்டதனால்தான் இத்தனை உயிர்களை காவு கொடுத்திருக்கிறோம். இன்றைக்கு போதைப்பொருள் பல வடிவத்தில் வருகிறது சாக்லெட்,கஞ்சா, ஊசி வடிவத்தில் போதை பொருட்கள் புழக்கத்தில் வருகிறது. தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தால் கொலை, கொள்ளை அதிகரித்து வருகிறது. கள்ளச்சாராய மரணங்களுக்கு தார்மீக பொறுப்பேற்று ஸ்டாலின் பதவி விலக வேண்டும்.
முன்பு இருந்த டிஜிபி சைலேந்திரபாபு பதவியில் இருந்த போது ஆபரேசன் கஞ்சா 2.0, 3.0 நடத்தினார். கடைசி வரைக்கும் அவரால் போதை பொருள் நடமாட்டத்தை ஒழிக்க முடியவில்லை. கடைசி வரைக்கும் அவர் ஓ போட்டு விட்டு போய் விட்டார் என்றும் குற்றம் சாட்டினார். நாளைய தினம் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்கப்போவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். இதனையடுத்து அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
இதே போல சென்னையில் நடைபெறும் ஆர்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. மதுரையில் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
What's Your Reaction?