ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட எம்.எஸ்.சி. ஏரீஸ் சரக்கு கப்பல்...  இந்திய பெண் பணியாளர் விடுவிப்பு...

ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் இருந்து இந்திய பெண் பணியாளர் விடுவிப்பு

Apr 18, 2024 - 19:34
ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட எம்.எஸ்.சி. ஏரீஸ் சரக்கு கப்பல்...  இந்திய பெண் பணியாளர் விடுவிப்பு...

ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட எம்.எஸ்.சி. ஏரீஸ் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள் 17 பேரில் விடுவிக்கப்பட்ட பெண் பணியாளர் ஒருவர் தாயகம் திரும்பியுள்ளார்.

சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் அமைந்துள்ள ஈரான் நாட்டின் தூதரகம் மீது இஸ்ரேல் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானின் இஸ்லாமிய புரட்சி படையை சேர்ந்த 3 முக்கிய அதிகாரிகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான், கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளையும், 30-க்கும் கூடுதலான தரைவழி தாக்குதல் நடத்த கூடிய ஏவுகணைகள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை கொண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. 

இதையடுத்து இஸ்ரேலுடன் சம்பந்தப்பட்ட எம்.எஸ்.சி. ஏரீஸ் என்ற சரக்கு கப்பலை கடந்த 13-ந் தேதி சிறைபிடித்தது. ஓமன் வளைகுடா அகில் ஹார்முஸ் ஜலசந்தியையொட்டிய பகுதியில் வைத்து ஈரான் இஸ்லாமிய புரட்சி காவல் படையால் கப்பல் சிறை பிடிக்கப்பட்டது. அந்த சரக்கு கப்பலில் 17 இந்தியர்கள் உள்பட 25 மாலுமிகள் சிக்கிக்கொண்டனர். 

இதனிடையே, இரு தினங்களுக்கு முன் எம்.எஸ்.சி. ஏரீஸ் சரக்கு கப்பலில் சிக்கிய இந்தியர்களை மீட்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஈரான் தூதரகத்தை தொடர்ப்பு கொண்டு பேசினார். அப்போது, கப்பலில் உள்ளவர்களை சந்திக்க இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என ஈரான் அதிகாரிகள் உறுதியளித்தனர். 

இந்த நிலையில் ஈரான் இஸ்லாமிய புரட்சி காவல் படையினர் சிறைபிடித்த எம்.எஸ்.சி. ஏரீஸ் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள் 17 பேரில் விடுவிக்கப்பட்ட பெண் பணியாளர் தாயகம் திரும்பியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow