நீட், க்யூட் தேர்வு மாநில அரசுகளின் விருப்பம்.. கல்விக்கடன் ரத்து.. 100 நாள் வேலைக்கு ரூ.400 ஊதியம்.. காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி

நீட் போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்தி கொள்ளலாம், குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டு ரூ.1 லட்சம் வழங்கப்படும். போன்ற பல்வேறு முக்கிய அம்சங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. வேலைவாய்ப்பு, பொருளாதாரம், மக்கள் நலனை மையப்படுத்தி தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

Apr 5, 2024 - 13:19
Apr 5, 2024 - 13:28
நீட், க்யூட் தேர்வு மாநில அரசுகளின் விருப்பம்.. கல்விக்கடன் ரத்து.. 100 நாள் வேலைக்கு ரூ.400 ஊதியம்.. காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக வரும் 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைபெற உள்ளது. அரசியல் கட்சித்தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை தயாரித்து அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றனர். ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்போடு இருக்கும் காங்கிரஸ் கட்சி இன்றைய தினம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான குழுவை அமைத்தது. இந்தக் குழு தேர்தல் அறிக்கை தொடர்பாக நாடு முழுவதும் ஆலோசனை கேட்டு அதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது. 

அதன்படி, தேர்தல் அறிக்கையை இன்று டெல்லியில் வைத்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். தேர்தல் அறிக்கை தயாரித்தது குறித்து பேசிய ப.சிதம்பரம், “நீதி என்பதை மையப்படுத்தி தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 10 ஆண்டுகளில் யாரெல்லாம் ஒதுக்கப்பட்டார்களோ அவர்களுக்கு நீதி வழங்கும்வகையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது, work, wealth, welfare என்ற அடிப்படையில் வேலைவாய்ப்பு, பொருளாதாரம், மக்கள் நலனை மையப்படுத்தி தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது, இந்த அறிக்கை அனைத்து தரப்பு மக்களுக்கும் நீதி வழங்கும் என்று தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை விளக்கிப் பேசினார்.

காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். அத்துடன், பொருளாதாரதில் நலிவடைந்த அனைத்து சமூகத்தினருக்கும் 10% இடஒதுக்கீடு, மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை மீண்டும் கொண்டு வரப்படும்,  நீட், CUET தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பத்திற்கு ஏற்ப நடத்திக் கொள்ளலாம், மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்த பிறகே புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளும் வழங்கப்பட்டுள்ளன

.

மார்ச் 2024 வரை பெறப்பட்ட அனைத்து கல்விக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும், குறிப்பாக 1 முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வி இலவசமாக்கப்படும், ஏழைக்களுக்கான மருத்துவக் காப்பீடு ரூ.25 லட்சமாக அதிகரிக்கப்படும், இடஒதுக்கீடு அனைத்து சாதியினருக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரயில் பயணங்களில் முதியோர்களுக்கான கட்டணச் சலுகை மீண்டும் வழங்கப்படும், புதுச்சேரி மற்றும் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும், குறிப்பாக, ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கும் மகாலட்சுமி திட்டம் கொண்டுவரப்படும், விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும், பள்ளி, கல்லூரிகளில் பட்டியலின மாணவர்களின் மீதான வன்கொடுமையை தடுக்க ரோஹித் வெமுல சட்டம், அரசு பணிகளுக்கு ஒப்பந்த முறையில் ஆட்கள் சேர்க்கும் முறை ரத்து செய்யப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டுள்ளன.

2025 முதல் அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவிகிதம் இடம் ஒதுக்கப்படும், 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் ரூ.400ஆக உயர்த்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி பட்டியலில் அளிக்கப்பட்டிருக்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow