"அவன் கிடக்குறான் விடுங்க.." - செந்தில்பாலாஜியை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
செந்தில்பாலாஜி ஜாமின் பெற்று வெளியில் வந்துள்ள நிலையில், அவரை நேரில் சென்று நலம் விசாரித்தார் அமைச்சர் கே.என்.நேரு.
வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்ததாக அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த ஓராண்டுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பின்னர் சென்னை உயர்நீதிமன்றமும் தொடர்ச்சியாக தள்ளுபடி செய்திருந்தது. பலமுறை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு மீதான வாதங்கள் நிறைவடைந்த நிலையில் கடந்த மாதம் தீர்ப்புக்காக இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின், ஜார்ஜ் மாசிஹ் தலைமையிலான அமர்வு செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமினில், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தனர்.
நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, 471 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த செந்தில் பாலாஜி வெளியே வந்தார். தொண்டர்களும், அவரது ஆதரவாளர்களும் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வரவேற்றனர். பிறகு புழல் சிறையில் இருந்து வெளியே வந்த அவர், “அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என்மீது தொடரப்பட்ட பொய் வழக்கில், சட்ட ரீதியாக சந்தித்து நிச்சயம் வெளிவருவேன். முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் வாழ்நாள் நன்றி” எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், அடுத்தடுத்து அமைச்சர்கள் செந்தில்பாலாஜியை நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர்.செந்தில்பாலாஜியை சந்திக்க வந்த அமைச்சர் கே.என்.நேரு நலம் விசாரித்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதலமைச்சர் சொன்னது போல கட்சிக்காக செந்தில் பாலாஜி தியாகமாக நின்று வெளியே வந்துள்ளார். மன உறுதியுடன் வெளியே வந்துள்ளார். 471 நாட்கள் சிறையில் இருந்து அவர் வெளியே வந்திருப்பது பெரிய விஷயம். இந்த வழக்கில் அவர் வெற்றி பெற வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.என்.நேர், “எதிர்க்கட்சிகளின் விமர்சனம் குறித்து கவலை இல்லை. எங்கள் கட்சிக்காரர் வெளியே வந்தால் நாங்கள் தான் வாழ்த்து சொல்லுவோம். (அவன் கிடக்குறான் விடுங்க என்று எதிர்க்கட்சிகள் விமர்சனத்திற்கு பதில் அளித்தார்). விமர்சனம் செய்வது எதிர்க்கட்சிகளின் செயல்.. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து கவலை இல்லை” என்று தெரிவித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
What's Your Reaction?