“படம் பிடிக்கலைன்னா சொல்லாதீங்க... 120 ரூபான்னா சும்மாவா?” MS பாஸ்கரை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்
படம் பிடிக்கவில்லை என்றால் அதனை வெளியே சொல்லாதீங்க என பேசிய எம்.எஸ் பாஸ்கரை நெட்டிசன்கள் பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
சென்னை: பட்டாபியாக ரசிகர்களிடம் பிரபலமான எம்.எஸ் பாஸ்கர், தற்போது தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக வலம் வருகிறார். காமெடி, குணச்சித்திரம், வில்லன் என எந்த கேரக்டர் என்றாலும் தனது நடிப்பால் ரசிகர்களை அசரடித்துவிடுவார் எம்.எஸ் பாஸ்கர். பார்க்கிங் படத்தில் வில்லத்தனமாக நடித்து மிரட்டிய அவர், தற்போது வாய் கொடுத்து மாட்டிக் கொண்டு திருதிருவென முழித்துக் கொண்டிருக்கிறார். விதார்த் நடித்துள்ள லாந்தர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட எம்.எஸ் பாஸ்கர், சினிமா விமர்சனம் குறித்து பேசினார்.
அதில், “நீங்கள் பார்க்கும் படம் நல்லா இருந்தால் அதை நாலு பேரிடம் சொல்லுங்கள். அப்படி நல்லாயில்லை என்றால் பேசாமல் இருந்துவிடுங்கள், மற்றவர்கள் தியேட்டரில் போய் பார்க்கட்டும். அந்தப் படத்துக்கா போற... அது நல்லாயில்ல.... போகாதீங்கன்னு சொல்லாதீங்க. ஏனென்றால் ஒரு படம் எடுக்க எத்தனை பேரின் உழைப்பு இருக்கிறது என தெரியுமா?. பல கஷ்டங்களை கடந்து ஒரு படம் உருவாகிறது, சிலர் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பதும் உண்டு. இதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் ஒரு படத்தை பார்க்க வேண்டாம், அது மொக்கை என்பதாக விமர்சிக்க வேண்டாம்.”
“இந்தப் படங்களை பார்க்க 120 முதல் 200 ரூபாய் செலவாகும். அதில் மாட மாளிகைகளோ அல்லது கோபுரங்களோ கட்டிவிடப் போவதில்லை. படங்கள் நன்றாக ஓடினால் அதன் மூலம் பல குடும்பங்கள் வாழும் என்பதை மறக்க வேண்டாம்” எனக் கூறியிருந்தார். எம்.எஸ் பாஸ்கரின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக, நெட்டிசன்கள் அவரை பங்கம் செய்து வருகின்றனர். ”உழைத்த பணத்தில் படம் பார்க்கிறோம். 120 ரூபாய் சும்மா வரவில்லை. ஹோட்டலில் சாப்பாடு சரியில்லையென்றால் அதை தட்டிக் கேட்காமல் அமைதியாக இருப்பீர்களா?” என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதேபோல், தனியாக தியேட்டருக்குப் படம் பார்க்கச் சென்றால் டிக்கெட், பைக் பார்க்கிங் எல்லாம் சேர்த்து 250 ரூபாய் செலவாகிறது. அதுவே குடும்பத்துடன் போனால் 1000 ரூபாய்க்கு அதிகமாகவே செலவு செய்ய வேண்டியுள்ளது. இது மிடில் கிளாஸ் ஃபேமிலியை சேர்ந்தவர்களுக்கு பெரிய பட்ஜெட் என்பது எம்.எஸ் பாஸ்கருக்கு தெரியுமா எனவும் விளாசி வருகின்றனர். ஷூட்டிங் போகும் நடிகர்கள் ஏசி கேரவனில் அமர்ந்து தரமான சாப்பாடு சாப்பிடுகிறார்கள். ஆனால் தியேட்டர் செல்லும் ரசிகர்களுக்கு நல்ல குடி தண்ணீர் கூட இலவசமாக கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக கேண்டீனில் பாப்கார்ன் வாங்கவே 500 ரூபாய் வரை செலவாகிறது.
இதையெல்லாம் நடிகர்கள் எப்போதாவது பேசியிருக்கார்களா..? குடும்பத்துடன் போய் ஒரு மொக்கை படம் பார்க்க ஆயிரம் ரூபாம் செலவு செய்ய வேண்டுமா..? எம்.எஸ் பாஸ்கர் போல கோடிகளில் சம்பாதித்தால் ஆயிரம் ரூபாய்க்கு கணக்கு பார்க்க தேவை இருக்காது. இப்படி பண்ணையார் மனநிலையில் பேசுவதெல்லாம் அபத்தத்திலும் அபத்தம் என அவரை வெளுத்து வாங்கி வருகின்றனர். அதேபோல் இப்படி கட்டாயப்படுத்தி எல்லாம் மொக்க படங்களை ஓட வைக்க முடியாது. படம் நல்லா இருந்தால் மக்கள் தானாக தியேட்டருக்கு செல்வார்கள், இல்லையென்றால் நெகட்டிவாக தான் விமர்சனங்கள் வரும் என எம்.எஸ் பாஸ்கரை புரட்டி எடுத்து வருகின்றனர்.
What's Your Reaction?