Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் குரங்கு பெடல்… 90ஸ் கிட்ஸ் நாஸ்டாலஜியாவில் அடுத்த மூவி
கோலிவுட்டின் முன்னணி ஹீரோவான சிவகார்த்திகேயன் படத் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி அவரது தயாரிப்பில் உருவாகியுள்ள குரங்கு பெடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சென்னை: சிவகார்த்திகேயன் புரொடக்ஷனின் அடுத்த தயாரிப்பாக நெஞ்சை நெகிழ வைக்கும் படமாக உருவாகியுள்ள ‘குரங்கு பெடல்.’ கமலக்கண்ணன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். சேலம், ஈரோடு மாவட்டங்களில் உள்ள மயக்கும் காவிரி ஆற்றின் அழகிய கரையோரங்களில் 1980 களின் கோடைகாலத்திற்கு பார்வையாளர்களை படம் கொண்டு செல்கிறது. மனதைக் கவரும் இந்தக் கதை, சைக்கிள் ஓட்டும் கலையில் தேர்ச்சிப் பெறத் துடிக்கும் மகனான மாரியப்பனுக்கும் அவனது தந்தைக்கும் இடையே உள்ள பிணைப்பை வெளிக்கொண்டு வருகிறது.
ராசி அழகப்பன் எழுதிய ’சைக்கிள்’ சிறுகதையால் ஈர்க்கப்பட்ட இந்தத் திரைப்படம் குடும்ப அமைப்பு, கனவுகள் பற்றிய ஒரு கூர்மையான ஆய்வு ஆகும். இயக்குநர் கமலக்கண்ணன் படம் உருவாக்குவதில் தனது புதுமையான அணுகுமுறை, தனித்துவமான பாணிக்காக பலருடைய பாராட்டுகளைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு அவர் இயக்கிய மதுபானக்கடை, வட்டம் போன்ற படங்கள் மதிப்புமிக்க பல விருதுகளை பெற்றிருக்கிறது. இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது ஆத்மார்த்தமான மெல்லிசை, மயக்கும் பின்னணி இசைக்காக பாராட்டப்படுபவர். இந்தப் படத்தில் அவரது இசை குழந்தைகளின் உலகத்தை பிரதிபலித்து எண்பதுகளின் இசையை மீண்டும் திரையில் கொண்டு வரும்.
சந்தோஷ் வேலுமுருகன், வி.ஆர். ராகவன், எம். ஞானசேகர், ரத்தீஷ், சாய் கணேஷ் ஆகியோர் இந்த தலைசிறந்த படைப்பில் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபம் கொண்ட புகழ்பெற்ற குழந்தைகள் நிபுணர் நந்தகுமார் இந்த இளம் திறமையாளர்களுக்கு 45 நாட்கள் நுட்பமாக நடிப்பு பயிற்சி அளித்தார். இவர்களுடன் நக்கலைட்ஸ் பிரசன்னா பாலச்சந்தர், ஜென்சன் திவாகர் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
What's Your Reaction?