நாடாளுமன்றத்தில் ஃபேஷன் ஷோ நடத்திய மல்லிகார்ஜூன கார்கே - பிரதமர் கிண்டல்
பாஜக ஆட்சியை விமர்சித்து கருப்பு அறிக்கை வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாடாளுன்றத்தில் ஃபேஷன் ஷோ நடத்தி திருஷ்டி பொட்டு வைத்ததாக பிரதமர் நரேந்திர மோடி கிண்டலுடன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் முன்னதாக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, காங்கிரசின் 10 ஆண்டு கால ஆட்சியையும் பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியையும் ஒப்பிட்டு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். தொடர்ந்து பாஜக தலைமையிலான மத்திய அரசின் வெள்ளை அறிக்கைக்கு எதிராக பிரதமர் மோடி அரசின் 10 ஆண்டுகால ஆட்சி குறித்து காங்கிரஸ் கட்சி கருப்பு அறிக்கை வெளியிட்டது.
இதைத்தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பணவீக்கத்தை கட்டுப்படுத்த பாஜக மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன என கேள்வியெழுப்பினார். வேலையின்மை, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி உள்ளிட்டவற்றால் கோடிக்கணக்கான விவசாயிகள், தினக்கூலித் தொழிலாளர்களின் எதிர்காலம் பேரழிவுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மோடி அரசு பொருளாதாரத்தில் தோல்வியடைந்து விட்ட நிலையில், அதனை எடுத்துக்கூறும் வகையில் கருப்பு அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் அவர் பேசினார்.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது,"ஒரு குழந்தை சிறப்பாக ஏதாவது செய்யும் போதும், சிறப்பு விழாக்களுக்கு குழந்தை புத்தாடை உடுத்தி தயாராகும் போதும், தீய விஷயங்கள் மற்றும் கண் திருஷ்டிகளில் இருந்து குழந்தையை பாதுகாக்க பெரியவர்கள் அதற்கு திருஷ்டி பொட்டு வைப்பார்கள். கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சியின் புதிய பாதையில் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. தீமையின் கண்களில் இருந்து நாம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய நமக்கு திருஷ்டி பொட்டு வைக்கும் முயற்சி ஒன்று நடந்துள்ளது. அதற்காக கார்கேவுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்" என கிண்டலுடன் பேசினார்.
What's Your Reaction?