சதுரங்கவேட்டை பாணி மோசடி.. தங்கப்புதையல்.. சென்னை வெங்காய வியாபாரியை குறி வைத்தவர் கைது
பழங்கால புதையல் தங்க நகை இருப்பதாகவும், அதனை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் எனக்கூறி வெங்காயம் வியாபாரிடம் நூதன கொள்ளையில் ஈடுபட்ட கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
மோசடிகளில் எத்தனையோ வகை உண்டு. அதை அத்தனையையும் மொத்தமாக சதுரங்க வேட்டை படத்தில் வெளிச்சம் போட்டு காட்டியிருப்பார்கள். முன்பெல்லாம் லட்சக்கணக்கில் ஏமாற்றியவர்கள் இப்போது கோடிக்கணக்கில் ஏமாற்றுகிறார்கள். நிதி நிறுவனங்களில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல்தான் இப்போது மோசடிகள் நடந்து வருகிறது.
சதுரங்க வேட்டை பட பாணியில் தற்போது ஒரு கும்பல் சென்னைக்கு வந்து 15 லட்சம் ரூபாயை ஏமாற்றியுள்ளது. பணத்தை ஏமாந்தவர் வெங்காய வியாபாரி ராமஜெயம். சென்னை கோயம்பேட்டு வெங்காய மண்டியில் வெங்காய கடை வைத்திருக்கும் ராமஜெயத்திடம், இளைஞர் ஒருவர் வெங்காயம் வாங்குவது போல பேசி பழகி உள்ளார்.
அவரது பலம், பலவீனங்களை அறிந்த அந்த நபர், மெதுவாக பணத்தாசையை தூண்டியுள்ளார். தன்னிடம் பழங்கால புதையல் தங்க நகைகள் இருப்பதாகவும் அவற்றில் சிலவற்றை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என கூறியுள்ளார். அதற்கு அடுத்த நாளே அந்த இளைஞர் சில பழங்கால தங்க நகையை கொண்டு வந்து வேண்டுமென்றால் சோதனை செய்து கொள்ளுங்கள் என்று கூறி சில சாம்பிள் கொடுத்துள்ளார்.
வெங்காய கடை உரிமையாளர் ராமஜெயம் அந்த நகைகளை சோதனை செய்த போது அது உண்மையான தங்கம் என தெரியவந்தது. இதனையடுத்து ராமஜெயம் அந்த இளைஞரிடம் ரூபாய் 20 லட்சத்திற்கு தங்க நகை வாங்குவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த இளைஞர் தாம்பரத்தில் ஒரு விடுதிக்கு வரவழைத்து தங்க நகைகளை கொடுத்துள்ளார். முன் பணமாக ரூபாய் 15 லட்சம் கொடுத்து ராமஜெயம் தங்க நகைகளை வாங்கி வந்து சோதனை செய்து பார்த்தபோது அவை அனைத்தும் போலியான நகைகள் என தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து ராமஜெயம் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தாம்பரம் போலீசார் சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் அழைப்புகளை வைத்து மோசடி நபர் கர்நாடக மாநிலம் மாண்டியா அடுத்துள்ள கிராமத்தில் தங்கி இருந்ததை கண்டறிந்தனர்.
இந்த நிலையில் தாம்பரம் தனிப்படை போலீசார் கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதிக்கு சென்று பணத்தை மோசடி செய்து விட்டு பதுங்கியிருந்த ராகுல் என்ற இளைஞரை கைது செய்து தாம்பரம் அழைந்து வந்துள்ளனர். விசாரணையில் ராகுல் மீது பல்வேறு காவல் நிலையங்களில் இதே போன்று போலி தங்க நகை மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ராகுல் உட்பட 10 நபர்கள் திருச்சி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. பலமுறை போலீசில் சிக்கியும் மீண்டும் மீண்டும் பலரை ஏமாற்றி பணத்தை மோசடி செய்து வந்துள்ளார் ராகுல். கைது செய்யப்பட்ட ராகுலிடம் தாம்பரம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?