திமுக ஆட்சியில் பெற்றோர்கள் ரொம்ப பயப்படுறாங்க.. அண்ணாமலை சொல்லும் காரணம் !
மத்திய அரசு நிதி கொடுத்த போதும் எந்த சாலைகளும் சீரமைக்கப்படுவதில்லை . அதுகுறித்து கேட்டால் செந்தில் காமெடியில் வருவது போல, அந்த பழம் தான் இந்த பழம் என ஏமாற்றுகின்றனர்-அண்ணாமலை
திமுக ஆட்சியில் பெற்றோர்களே பிள்ளைகள் மீது சந்தேகப்பட துவங்கியுள்ளதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
வருகிற 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நடக்கவுள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கோயம்புத்தூரில் போட்டியிடுவதை அடுத்து அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கோயம்புத்தூர் மாவட்டம் ஒண்டிப்புதூரில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பரப்புரை செய்த அண்ணாமலை, ஆளும் திமுகவினரை கடுமையாக விமர்சித்து பேசினார். அதில், முன்னெப்போதும் இல்லாத வகையில் திமுக ஆட்சியில் தான் பெற்றோர்கள் பிள்ளைகள் மீது சந்தேகப்பட துவங்கியுள்ளனர் எனக்கூறினார்.
திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து விட்டதாக சுட்டிக்காட்டிய அவர், பிள்ளைகள் இதனால் பாதிக்கப்படுவார்களோ என பெற்றோர்களுக்கு பயம், அதனால் வெளியே சென்று வந்தாலே பெற்றோர்கள் சந்தேகப்பட ஆரம்பித்துள்ளனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசு நிதி கொடுத்த போதும் எந்த சாலைகளும் சீரமைக்கப்படுவதில்லை . அதுகுறித்து கேட்டால் செந்தில் காமெடியில் வருவது போல, அந்த பழம் தான் இந்த பழம் என ஏமாற்றுகின்றனர் என்றார்.
மேலும், ஒண்டிப்புதூரில் பாலம் அமைக்கப்படும் என உறுதியளித்த அவர், பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தபின்னர், மக்கள் ரிலாக்ஸ்-ஆக அமர்ந்து நாங்கள் சொன்ன வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக டிக் செய்து வந்தால் போதும் வேற எந்த வேலையும் இருக்காது எனவும் பேசினார்.
What's Your Reaction?