ஹரியானா டூ சென்னை... ட்ரிப் அடித்துத் நகை திருடிய கும்பல்.. தட்டி தூக்கி மாவு கட்டு போட்ட போலீஸ்
கொள்ளையர்களிடம் இருந்து ஆறரை சவரன் நகையைப் பறிமுதல் செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்
எதையும் பிளான் பண்ணி செய்தால் மாட்டிக் கொள்ளாமல் செய்யலாம் என்று சூது கவ்வும் திரைப்படத்தில் சொல்வதை அப்படியே பின்பற்றி, டார்கெட் வைத்துத் திருடி, சொந்த ஊரில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த ஹரியானா குழு, மாவு கட்டுடன் காவல்துறையில் சிக்கியிருக்கிறது. யார் இந்த ஹவாரியா கும்பல்? சிக்கியது எப்படி?
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்பதைத் தவறாகப் புரிந்துகொண்டு ஹரியானாவில் இருந்து கிளம்பிய இளைஞர்கள் கும்பல் ஒன்று, மாதாமாதம் சென்னைக்கு ட்ரிப் அடிப்பதை முழுநேர வேலையாக வைத்திருந்திருக்கிறது. இவர்கள் சுற்றுலாப் பயணிகளா? வழக்கம்போல் கட்டட வேலைக்கு வந்தவர்களா என்று பார்த்தால், திருடுவதையே டார்கெட் பிசிர் இல்லாமல் முடிப்பதற்காகவே வந்திருக்கிறது இந்தக் கும்பல்.
யார் இந்தக் கும்பல்?
ஹரியானாவைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவான இது, திருடுவதில் தனி வாடிக்கையையே வைத்துக் கொண்டு இருந்துள்ளது. அதாவது, மாதம் ஒரு நாளை புக் பண்ணி, சென்னை வர வேண்டியது. ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்துத் தங்க வேண்டியது. வாடகைக்கு வண்டிகளை எடுக்க வேண்டியது. இந்த மாதம் இவ்வளாவு சவரன் நகை டார்கெட் என்று முடிவெடுத்து, அதற்கு ஏற்றது போல் வீட்டுக்குள் புகுந்தோ, செயின் ஸ்நாட்சிங்கில் ஈடுபட்டோ நகைகளைத் திருட வேண்டியது. அந்த மாதத்திற்கான டார்கெட்டை முடித்ததும் சொந்த ஊருக்கே சென்று சொகுசு வாழ்க்கை வாழ வேண்டியது. அடுத்த மாதம் மீண்டும் இன்னொரு டார்கெட்டுடன் சென்னைக்கு வர வேண்டியது. இப்படியே பிழைப்பை ஓட்டிக் கொண்டிருந்த இந்தக் கும்பல், காவல்துறையில் சப்பையாகச் சிக்கிக் கொண்டதுதான் சுவாரஸ்யமே.
எப்படிச் சிக்கியது?
சென்னை ஓட்டேரி காவலர் குடியிருப்பில் வசித்து வரும் சுபாஷினி என்ற பெண்ணிடம், இந்தக் கும்பல் நகையைப் பறித்துக் கைவரிசை காட்டியிருக்கிறது. இது குறித்து சுபாஷினி புகார் தெரிவித்ததன் அடிப்படையில், காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, கடந்த 9-ம் தேதி நடந்த நகைப்பறிப்பில் பார்த்த அதே முகங்களாகவே இருந்திருக்கிறது. அதன் அடிப்படையில் ஆய்வு செய்து, பெரியமேடு பகுதியில் அவர்கள் அறையெடுத்துத் தங்கியிருந்த வட மாநிலத்தவர்கள் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட 3 பேரைப் பிடிக்க முயன்றபோது ஓட்டேரி பனந்தோப்பு அருகே ஓடியபோது தடுக்கி விழுந்தனர். இதனால் கையிலும், காலிலும் எலும்பு முறிவு ஏற்பட, காவல்துறையினர் வளைத்துப் பிடித்துக் கைது செய்து, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் இருந்து ஆறரை சவரன் நகையைப் பறிமுதல் செய்துள்ள காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையிலடைத்தனர். ஒரேடியாகத் திருடி, ஓவர் நைட்டில் ஒபாமா ஆகலாம் என்று பலர் யோசிக்க, டார்கெட் வைத்துத் திருடி, நாங்க 100 பர்செண்ட் புரபஷனல் என்றெல்லாம் ஃபீல் பண்ணிக் கொண்டிருந்தவர்கள், இப்போது இந்தியில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
What's Your Reaction?