பணம் கேட்டு மிரட்டிய மாவட்டச் செயலாளரை எதிர்த்து சாலை மறியல்..!
தஞ்சையில் பணம் கேட்டு மிரட்டி ஆட்களுடன் வந்து கடையை சூறையாடிய விவசாய நலசங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருவோணத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்டம் திருவோணம் சார்பதிவாளர் அலுவலகம் எதிரில் சபரிநாதன் என்பவர் கணினி சேவை மையம் நடத்தி வருகிறார். இவரது வீடும், கடையும் ஒன்றாக உள்ளது. இந்நிலையில், கடந்த 8ம் தேதி விவசாய நலச்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சின்னத்துரை தனது ஆதரவாளர்களுடன் சென்று சபரிநாதனிடம் தகராறில் ஈடுபட்டு, பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. அத்துடன், சின்னத்துரை உடன் வந்தவர்கள் சபரிநாதனின் கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடியதாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து, இது தொடர்பாக திருவோணம் காவல் நிலையத்தில், சின்னதுரை மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சபரிநாதன் புகார் அளித்திருந்தார். மேலும், கந்தர்வக்கோட்டை - பட்டுக்கோட்டை இடையிலான சாலையில் திருவோணம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பின்னர், தகவல் அறிந்து அந்த இடத்திற்கு வந்த காவல் துறையினர், இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து, மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிக்க | முன்னாள் பிரதமர் சரண் சிங், எம்.எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்ட 3 பேருக்கு பாரத ரத்னா விருது
What's Your Reaction?