காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணம் கோலாகலம்.. பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம்

காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம் இன்று (ஜூன் 20) விமரிசையாக நடைபெற்றது.

Jun 20, 2024 - 17:46
காரைக்கால் அம்மையார்  திருக்கல்யாணம் கோலாகலம்.. பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம்

காரைக்கால்: பரமதத்தர், காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

63 நாயன்மார்களில் ஒருவராக போற்றப்படும் அம்மையார் காரைக்கால் அம்மையார். நான்காம் நூற்றாண்டில் தோன்றி தமிழுக்கும், சைவ சமயத்துக்கும் பெரும் தொண்டாற்றியவர்.   திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் 11 பாடல்கள், திருவிரட்டை மணிமாலை 20 பாடல்கள்,  அற்புதத் திருவந்தாதி 101 பாடல்கள் என இவர் எழுதிய பாடல்கள் அனைத்துமே தமிழ் இலக்கியத்தில் முக்கியமானவை. 

மனிதகுலத்தில் பிறந்து, வளர்ந்து இறைநிலையை அடைந்த காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில் காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் கோவிலில் ஆண்டுதோறும் புராண மரபுபடி ஆனி பவுர்ணமியில் மாங்கனி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு திருவிழா நேற்று (ஜூன் 19) மாலை ஆற்றங்கரை சித்திவிநாயகர் கோயிலிலிருந்து மாப்பிள்ளை அலங்காரத்தில் பரமதத்த செட்டியாரை ஊர்வலமாக (மாப்பிள்ள அழைப்பு) அழைத்து வரும் நிகழ்வுடன் தொடங்கியது. இன்று காலை அம்மையார் மணிமண்டபத்தில் அம்மையார் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

முன்னதாக திருக்குளக்கரைக்கு புனிதவதி அம்மையார் எழுந்தருளினார். பின்னர் திருக்கல்யாண மண்டபத்துக்கு பரமதத்த செட்டியார் குதிரை வாகனத்தில் வந்தடைந்ததும், திருக்கல்யாண நிகழ்வுகள் தொடங்கின.சிவாச்சாரியார்கள் திருமாங்கல்யத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து திருமாங்கல்யத்தை சிவாச்சாரியார்கள் பக்தர்களிடம் எடுத்துக் காண்பித்து, பக்தர்கள் முன்னிலையில், காலை 11 மணிக்கு அம்மையாருக்கும், பரமதத்தருக்கும் திருக்கல்யாணம் செய்து வைத்தனர்.இதனையடுத்து மகா தீபாராதனைக் காட்டப்பட்டு, 16 வகையான சோடச உபசாரங்கள் செய்யப்பட்டது. ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

அம்மையார் திருக்கல்யாணத்தை தரிசனம் செய்தால் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்கும் என்று கருதப்படுவதால் ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாணத்தை தரிசனம் செய்தனர்.பக்தர்களுக்கு மாங்கனி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தாம்பூலப் பைகள் பிரசாதமாக வழங்கப்பட்டன.

இன்றைய தினம் இரவு  பிச்சாண்டவர் வெள்ளை சாற்றி புறப்பாடும், புனிதவதியாரும், பரமதத்த செட்டியாரும் முத்து சிவிகையில் திருவீதி உலா வருதலும் நடைபெறுகிறது. நாளை (ஜூன் 21) அதிகாலை 3 முதல் காலை 6 மணி வரை பிச்சாண்டவர், பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் தீபாராதனையும் 6.45 மணிக்கு பரமதத்தர் காசுக்கடை மண்டபத்துக்கு வருதலும் நடைபெறும். விழாவின் சிறப்பு மிக்க நிகழ்வான பக்தர்கள் மாங்கனிகளை வாரி இறைத்து இறைவனை வழிபடும் பிச்சாண்டவர் வீதியுலா புறப்பாடு காலை 9 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு அம்மையார் எதிர் கொண்டு அழைத்து மாங்கனியுடன் அமுது படைக்கும் நிகழ்ச்சி அம்மையார் கோயிலில் நடைபெறும்.நாளை மறுநாள் ( ஜூன் 22) அதிகாலை  5 மணிக்கு இறைவன் அம்மையாருக்கு காட்சி அளிக்கும் வைபவம் நடைபெறும். ஜோதி வடிவத்தில் இறைவனிடம் காரைக்கால் அம்மையார் ஐக்கியமாகும் நிகழ்வினை ஏராளமானோர் தரிசனம் செய்வார்கள். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow