பஞ்சாப் அணியின் சாதனை நாயகன் ஷஷாங் சிங்.. மலிவாக வாங்கப்பட்டவர்கள் வரலாறு ஆகிறார்கள்.. மனுஷ்யபுத்திரன் நெகிழ்ச்சி

மலிவாக வாங்கப்பட்டவர்கள் வேறொருவருக்குப் பதிலாக ஆள் மாறாட்டத்தில் உள்ளே வந்தவர்கள் அற்புதங்கள் நிகழ்த்தும்போது அந்த அசல் ஷஷாங் சிங் என்ன ஆனான் என்பதை ஒருவர்கூட நினைக்கவில்லை என்று மனுஷ்ய புத்திரன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Apr 27, 2024 - 14:50
பஞ்சாப் அணியின் சாதனை நாயகன் ஷஷாங் சிங்.. மலிவாக வாங்கப்பட்டவர்கள் வரலாறு ஆகிறார்கள்.. மனுஷ்யபுத்திரன் நெகிழ்ச்சி

ஐபிஎல்2024 இன் 42ஆவது லீக் ஆட்டம் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் குவித்தது. இமாலய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டாலும் அசராமல் ஆடிய பஞ்சாப் அணி 18.4 ஓவர்களிலேயே 262 ரன்களை எடுத்து சாதனை வெற்றி பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் இது மிகப்பெரிய சாதனையாகும். 

ஐபிஎல் போட்டிகளின் வரலாற்றில் ஒரு அணியால் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு இதுவாகும். இதன் மூலம் 6 புள்ளிகள் பெற்று 8 ஆவது இடத்துக்கு முன்னேறி பிளே ஆஃப் ரேசில் நாங்களும் உள்ளோம் என்று மற்ற அணிகளுக்கு தெரிவித்துள்ளது. சதமடித்த பேர்ஸ்டோ ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஐபிஎல் கிரிகெட் தொடரில் அனைவராலும் கொண்டாடப்படும் பஞ்சாப் அணி வீரர் ஷஷாங் சிங் பஞ்சாப் அணிக்குள் நுழைந்ததே ஒரு விபத்துதான். கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் குழப்பத்துக்கு மத்தியில் ஷஷாங் சிங்கை வாங்கி இருந்தது பஞ்சாப் அணி நிர்வாகம். ஷஷாங் சிங் என்ற ஒரே பெயரில் இரண்டு வீரர்கள் ஏலத்தில் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர். அதில் 32 வயதான ஷஷாங்கை பஞ்சாப் அணி, ரூ.20 லட்சத்துக்கு வாங்கி இருந்தது.

அடுத்த சில நொடிகளில் தவறான வீரரை வாங்கியதை அறிந்து அவரை திருப்பி கொடுக்கும் முடிவிலிருந்த பஞ்சாப் நிர்வாகம், தங்கள் அணியின் வீரராக பின்னர் ஏற்றுக் கொண்டது. இது குறித்து பஞ்சாப் அணி விளக்கமும் கொடுத்தது.

32 வயதான ஷஷாங் சிங் சத்தீஸ்கர் அணிக்காக விளையாடி வருகிறார். உள்ளூர் அளவிலான டி20 கிரிக்கெட்டில் 58 போட்டிகளில் விளையாடி உள்ளார்.  இந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணியின் ஹீரோவாக கொண்டாடப்படுகிறார் ஷஷாங் சிங்.  நேற்றைய தினம் ஈடன் கார்டன் மைதானத்தின் மூலை முடுக்கெல்லாம் தன் அட்டகாசமான பேட்டிங்கால் பந்துகளை சிக்சர்களாக பறக்க விட்டார். நேற்று 8 சிக்சர்களை அடித்து கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இதன் மூலம் 28 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். அவரது அதிரடி ஆட்டத்தை இணைய உலகில் நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர். 

கவிஞர் மனுஷ்ய புத்திரன் தனது முகநூல் பக்கத்தில் ஷஷாங் சிங்கின் நேற்றைய ஆட்டத்தை பற்றி உருக்கமாக கவிதையாக எழுதியுள்ளார். 

பிசாசைப்போல ஆடும்
இந்த ஷஷாங் சிங் ஆள் மாறாட்டத்தில்
வேறொரு ஷஷாங் சிங்கிற்குப்பதில்
தவறுதலாக ஏலத்தில் எடுக்கப்பட்டவன் என்கிறார்கள்

அது அப்படித்தான்  நிகழும்
உங்கள் வாழ்க்கையில்
நிகழவில்லையா?
யாரோ என்று நினைத்து
யாரையோ உங்கள் வாழ்க்கையில்
கொண்டு வந்தீர்கள்
பிறகு அவர்கள்தான் எல்லாவற்றையும் மாற்றியமைத்தார்கள்

எதற்கும் பயனற்றவர்கள் என நினைத்து
எதற்கும் இருக்கட்டும் என
நீங்கள் சிறிய இடமளித்தவர்கள்தான்
பிறகு உங்கள் வாழ்வையே
தாங்கி நின்றார்கள்

அது அப்படித்தான் நிகழும்
உங்கள் பட்டியலில் யார் இல்லையோ
உங்கள் தேர்வில் யார் இல்லையோ
அவர்கள் உங்கள் வீடுகளுக்க்கு
மாறுவேடத்தில் ஊடுருவி வருவார்கள்
நான் எல்லா இடங்களுக்கும்
அப்படித்தான் வந்தேன்

அன்பே
நீயும் என்னை
எளிய கவிதைகள் பாடும்
ஒரு பாணன் என்று நினைத்துத்துதானே
தற்செயலாக காண வந்தாய்
பிறகு உன் வாழ்வில் 
பூகம்பங்கள் நிகழ்ந்தன

நினைத்துப்பார்
ஒரு வேளை நீ
முதலில் திட்டமிட்ட
வேறொரு ஷஷாங் சிங்கையே
தேர்வு செய்திருந்தால்
உன் வாழ்வு எவ்வளவு 
சலிப்பாக இருந்திருக்கும் என்று

மலிவாக வாங்கப்பட்டவர்கள்
வேறொருவருக்குப் பதிலாக
ஆள் மாறாட்டத்தில் உள்ளே வந்தவர்கள்
அற்புதங்கள் நிகழ்த்தும்போது
அந்த அசல் ஷஷாங் சிங் 
என்ன ஆனான் என்பதை
ஒருவர்கூட நினைக்கவில்லை

என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மனுஷ்ய புத்திரன். சிறிய இடமளித்தவர்கள்தான் பிறகு உங்கள் வாழ்க்கையே  தாங்கி நின்றார்கள். தவறுதால ஏலம் எடுத்த ஷஷாங் சிங் ஒட்டுமொத்த அணியையும் தாங்கி பிடிப்பது குறித்து மனுஷ்யபுத்திரன் எழுதிய கவிதை இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow