சாலையில் உருண்டு புரண்டு போராடிய மக்கள்.. ஆச்சரியப்பட்ட அரியலூர்.. காரணம் இதுதானா?
மீன்சுருட்டி அருகே மேலணிக்குழி ஊராட்சித் தலைவரை கண்டித்து பொதுமக்கள் சாலையில் படுத்துறங்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள மேலணிக்குழி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏரி ஒன்று உள்ளது. இதனை ஊராட்சி சார்பில் தூர்வாரும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஏரிக் கரையை பலப்படுத்துவதாக கூறி கரையில் உள்ள சண்முக விலாஸ் என்ற மளிகைக் கடை முன்பு சுமார் 20 அடிக்கு மேல் மண்ணைக் கொட்டி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கடையின் ஷட்டரை திறக்க முடியாது நிலை ஏற்பட்டுள்ளதால், ஆத்திரமடைந்த கடை ஊழியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊராட்சி மன்றத் தலைவரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காட்டுமன்னார்கோவில் – ஸ்ரீமுஷ்ணம் சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், மண் திட்டை அகற்ற வேண்டும் எனவும் மழைநீர் செல்ல வழிவிட வேண்டும் எனவும் முழக்கம் எழுப்பினர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. ராமச்சந்திரன் மற்றும் மேலணிக்குழி கிராம நிர்வாக அலுவலர் ராமதாஸ் மற்றும் ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு கடையில் பணி செய்த ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
What's Your Reaction?