என்னால் மூச்சு விட முடியவில்லை.. கெஞ்சிய ஃபிராங்க் டைசன்.. அமெரிக்காவில் மீண்டும் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் சம்பவம்
அமெரிக்காவில், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றவரை அந்நாட்டு போலீஸார் கைது செய்ய முயன்றபோது கீழே தள்ளி அழுத்தியதில் அவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.
அமெரிக்காவின் ஒஹாயோ மாகாணத்தில் கடந்த 18ஆம் தேதி கார் ஒன்று அங்குள்ள மின்கம்பத்தின் மீது மோதியது. இந்நிலையில் அங்கு வந்த காவல்துறையினர் இந்த விபத்து தொடர்பாக அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். அப்போது விபத்தை ஏற்படுத்தியவர் அருகில் உள்ள பாருக்குள் ஓடிவிட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் அந்த பாருக்குள் சென்று, விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரான, கறுப்பினத்தை சேர்ந்த ஃபிராங்க் டைசன் (53) என்பவரை பிடிக்க முயன்றனர். அப்போது காவல்துறையினருக்கும் ஃபிராங்க் டைசனுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தப்பி ஓட முயன்ற ஃபிராங்க் டைசனை கீழே தள்ளி அவரது கைகளை பின்புறமாக வைத்து விலங்கு பூட்ட முயன்றனர். அப்போது, காவல்துறையினர் பலவந்தமாக அழுத்தியதில் ஃபிராங்க் டைசனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தனக்கு மூச்சுத் திணறுவதாகவும், தன்னால் சுவாசிக்க இயலவில்லை என்றும் அவர் காவல்துறையினரிடம் கெஞ்சினார். ஆனால் காவல்துறையினர் அதனை காதில் போட்டுக்கொள்ளாமல் விடாமல் அழுத்தினர். இதில் அவர் மூர்ச்சையானார்.
இந்நிலையில், சிறிது நேரத்தில் அவர் மூர்ச்சையானார். இதனையடுத்து அவருக்கு நாடித்துடிப்பு உள்ளதா என காவல்துறையினர் பரிசோதித்தனர். பின்னர் அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஃபிராங் டைசன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஃபிராங் டைசனை கைது செய்ய முயன்றபோது காவல்துறையினரின் உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமரா காட்சிகள் மூலம் இந்த சம்பவம் வெளியே தெரியவந்துள்ளது. கறுப்பினத்தவரான ஃபிராங்க் டைசன், போலீஸாரிடம் மூச்சுவிடமுடியவில்லை என கெஞ்சியும், விடாமல் அவர் அழுத்தி கொலை செய்யப்பட்ட விவகாரம் அமெரிக்காவில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே, கடந்த 2020ம் ஆண்டு மே மாதம், ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பினத்தவர், வெள்ளை போலீஸ் அதிகாரியால் கழுத்தில் மிதித்து கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 2020ஆம் ஆண்டில் மினியாபோலிஸ் காவல் துறையினரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட் வீடியோ இணையத்தில் பெரும் புயலை கிளப்பியது.
டெரெக் சாவின் என்ற அதிகாரி ஃபிலாய்டின் கழுத்தில் ஒன்பது நிமிடங்களுக்கும் மேலாக அழுத்தி இருந்தார். அப்போது பிளாய்ட் "என்னால் மூச்சுவிட முடியவில்லை என்று திரும்பத் திரும்பக் கூறி போதிலும் அந்த அதிகாரி கண்டுகொள்ளவில்லை. இந்த வீடியோ வெளியான பிறகு அமெரிக்காவில் மிக பெரியளவில் போராட்டங்கள் நடைபெற்றன. தற்போது மீண்டும் அதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது சர்வதேச அளவில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
What's Your Reaction?