அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு நெஞ்சு வலி.. அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவில் இருந்து அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Apr 1, 2024 - 10:32
Apr 1, 2024 - 11:48
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு நெஞ்சு வலி.. அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு நெஞ்சு வலி.. அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எனும் சாத்தூர் ராமச்சந்திரன், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள கோபாலபுரம் கிராமத்தில் 1949ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 8ல் பிறந்தவர். தீவிர எம்.ஜி.ஆர் ரசிகரான இவர், தனது ஊரில் 'தங்கக் கலசம் எம்.ஜி.ஆர்.ரசிகர் மன்றம்' என்ற அமைப்பைத் தொடங்கி, எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றச் செயலாளர் பதவி வரை உயர்ந்தார்.

அரசியல் மாற்றங்களால் தி.மு.கவிலிருந்து எம்.ஜி.ஆர் விலகி தனிக்கட்சி தொடங்கினார். அப்போது முதன்முதலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். எம்.ஜி.ஆர் ஆட்சியில் கூட்டுறவு, பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று கட்சி இரண்டாகப் பிரிந்தபோது, இவர் ஜெயலலிதா அணியில் இருந்தார்.

ஜெயலலிதாவை ஆதரித்த கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அப்போதே கூவத்தூர் சம்பவத்தை அரங்கேற்றியவர்.  32 எம்.எல்.ஏக்களை தனது கட்டுப்பட்டிற்கு கொண்டு வந்து விருதுநகரில் உள்ள தனது ஸ்பின்னிங் மில்லில் தங்கவைத்து பாதுகாத்தார். இதனையடுத்து ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக மாறினார். பின்னர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டு காலம் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த ராமச்சந்திரன், பின்னர் திமுகவில் இணைந்தார்.

திமுகவிலும் பல பதவிகளை பெற்றார். கருணாநிதி அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராகவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் கைத்தறித்துறை அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. சாத்தூர் தொகுதியில் ஆறு முறை, விளாத்திகுளத்தில் ஒரு முறை மற்றும் அருப்புக்கோட்டைத் தொகுதியில் 2016, 2021ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தொகுதியில் இரண்டு முறை வெற்றிபெற்றார்.

ஒன்பது முறை எல்.எல்.ஏவான ராமச்சந்திரன், ஆறாவது முறையாக அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். ஸ்டாலினின் அமைச்சரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை இவருக்கு ஒதுக்கப்பட்டது. வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது.

கடந்த 2022ஆம் ஆண்டு நெஞ்சுவலி ஏற்படவே உடனடியாக அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனை முடிவில் இருதய ரத்த நாளத்தில் அடைப்பு இருப்பதாக கண்டறியப்பட்டது. 

இதனையடுத்து, அவருக்கு ஆஞ்சியோ செய்ய மருத்துவக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். மழை வெள்ளம் காலங்களில் இரவு பகல் பாராமல் பணியாற்றி வந்தார் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன். லோக்சபா தேர்தலுக்காக பிரச்சாரத்திலும் பிசியாக இருந்தார் ராமச்சந்திரன். இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் இருந்த போது திடீரென அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து உடனடியாக அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலையை மருத்துக்குழு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow