மறைந்தும் மறையாத கேப்டன் புகழ்.. விஜயகாந்துக்கு கிடைத்த கௌரவம்.. ஸ்தம்பித்த சென்னை ஏர்போர்ட்
மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதுடன் சென்னை திரும்பிய பிரேமதலாவை வரவேற்க தொண்டர்கள் சென்னை விமான நிலையத்தில் குவிந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் காலமானார். அவருக்கு கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக 2024-ம் ஆண்டிற்கான பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அந்த விருதினை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து விஜயகாந்த் மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் மே 9ஆம் தேதி பெற்றுக்கொண்டார்.
பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டதை தொடர்ந்து விஜயகாந்த் குடும்பத்திற்கு டெல்லித் தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அதனை முடித்துக் கொண்டு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவருடைய மகன் விஜய பிரபாகரன் மேலும் துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதினை விமான நிலையத்தில் திரண்டிருந்த தொண்டர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் காண்பித்தார். அதன் பின்பு திறந்தவெளி வாகனத்தில் ஏறி தொண்டர்கள் அனைவருக்கும் பத்மபூஷன் விருதினை காண்பித்து பிரேமலதா விஜயகாந்த் நெகிழ்ந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமதலா, இந்த விருதை விஜயகாந்த் பெற்றிருந்தால் இன்னும் பெருமையாக இருந்திருக்கும். அவர் இல்லாத ஒவ்வொரு நொடியும் மரண வேதனையாக உள்ளது என்று கூறினார்.
பின்னர் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடியே தொண்டர்களுக்கு விருதினை காண்பித்தவாறு பிரேமலதா விஜயகாந்த், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அமைந்திருக்கும் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு புறப்பட்டு சென்றார்.
விருதுடன் சென்னை வந்த பிரேமலதா விஜயகாந்தை வரவேற்க 500க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுடன் சென்னைக்கு வந்த பிரேமலதாவை வரவேற்க அவரது இளைய மகன் சண்முகபாண்டியன் வந்தபோது அவருக்கு போலீசார் அனுமதிக்காததால் தேமுதிக தொண்டர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறையினருக்கும் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலையம் பகுதியில் தொண்டர்கள் அதிக அளவில் குவிந்த காரணத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
What's Your Reaction?