“அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது” -ஆந்திரா வீடியோவுக்கு உதயநிதி ரியாக்‌ஷன்

அனைவரும் சமம் என்கிற நமது கொள்கை அவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. பிறப்பாலும் - மதத்தாலும் பிரித்தாளும் கொள்கையைப் பேசி மக்களை வெல்ல முடியாத அவர்களின் விரக்தி தான் நம்முடைய வெற்றி.

Oct 9, 2024 - 16:26
 “அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது” -ஆந்திரா வீடியோவுக்கு உதயநிதி ரியாக்‌ஷன்

என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது என ஆந்திரா வீடியோவிற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  பதிலடி கொடுத்துள்ளார்.

ஆந்திராவில் உள்ள கோவில் ஒன்றின் வாசல் படியில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை காலால் மிதித்து சிலர் அவமதித்துள்ளனர். இது குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. முன்னதாக உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது பீகார், உத்தரப்பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில், ஆந்திராவில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை அவமதிக்கும் வீடியோ வெளியாகி வைரலானது. இதற்கு திமுக இளைஞரணி மற்றும் ஐடி விங் நிர்வாகிகள் பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், என்னை இழிவு செய்வதாக நினைத்து அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில்,  “ என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது.கொள்கை எதிரிகளுக்கு நம் மீது இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்றால், திராவிடக் கொள்கையினை நான் எந்தளவுக்குச் சரியாக பின்பற்றுகிறேன் என்பதற்கான சான்றிதழாகவே இதனைப் பார்க்கிறேன்.

தந்தை பெரியார் மீது செருப்புகளை வீசினர். அண்ணல் அம்பேத்கரை எவ்வளவோ அவமதித்தார்கள். பேரறிஞர் அண்ணாவை வசைபாடி மகிழ்ந்தனர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மீது ஏச்சுக்களையும் - பேச்சுக்களையும் தொடுத்தனர். நம் கழகத் தலைவர் மீது வீசப்படாத கடுஞ்சொற்கள் இல்லை.அனைவரும் சமம் என்கிற நமது கொள்கை அவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. பிறப்பாலும் - மதத்தாலும் பிரித்தாளும் கொள்கையைப் பேசி மக்களை வெல்ல முடியாத அவர்களின் விரக்தி தான் நம்முடைய வெற்றி.

என் புகைப்படத்தை அவர்கள் காலால் இன்னும் நன்கு மிதிக்கட்டும். அவர்களின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது. அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும்.கழக உடன்பிறப்புகள் இதைக்கண்டு கோபமுற வேண்டாம். இதற்கு எதிர்வினையாற்றுவதை – உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்த்து, தந்தை பெரியார் - அண்ணல் அம்பேத்கர் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் - கழகத்தலைவரில் வழியில் பகுத்தறிவு - சமத்துவப் பாதையில் என்றும் அயராது நடை போடுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow