திருவாரூர் வந்த முத்தமிழ்த் தேர் அலங்கார ஊர்தி!
அரசு பள்ளி மாணவர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் காண்போரை கவரும் வகையில் அமைந்தது.
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவாரூருக்கு வருகை தந்த முத்தமிழ்த் தேர் அலங்கார ஊர்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அதனை சிறப்பாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடும் வகையில் கலைஞர் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய அரும் பணிகள் மற்றும் அவரது பரிமாணங்களை போற்றும் வகையில் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இளம் தலைமுறைக்கு கலைஞர் கருணாநிதியின் பன்முகத் தன்மைகளை எடுத்துக் கூறும் வகையில் முத்தமிழ்த் தேர் என்ற அலங்கார ஊர்தி தயார் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஊர்தி கடந்த நான்காம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்து இன்று திருவாரூர் மாவட்டத்திற்கு வந்த முத்தமிழ்த் தேர் ஊர்திக்கு திமுக மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், காட்டூர் கலைஞர் கோட்டம், திருவாரூர் பழைய பேருந்து நிலையம், நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அலங்கார ஊர்தி காட்சிப்படுத்தப்பட்டது. திருவாரூருக்கு வருகை தந்த முத்தமிழ்த் தேர் அலங்கார ஊர்தியை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், திருவாரூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் மலர் தூவி உற்சாகமாக வரவேற்றனர்.
அலங்கார ஊர்தியை வரவேற்கும் விதமாக அரசு பள்ளி மாணவர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் காண்போரை கவரும் வகையில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?