மருதநாட்டு இளவரசி- கனிமொழிக்கு புதுப் பட்டம்!
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு நேரடியாக சென்று மக்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்பது மக்கள் களம் நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
மருதநாட்டு இளவரசி என கனிமொழிக்கு புது பட்டம் சூட்டிய தூத்துக்குடி திமுகவினர் ஒட்டி உள்ள போஸ்டர்கள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினராகவும், திமுக துணை பொதுச்செயலாளராகவும் இருக்கிறார் கனிமொழி. தூத்துக்குடி நிர்வாகிகள் அவருக்கு தடபுடல் விளம்பரம் கொடுத்து வரவேற்பு கொடுப்பது திமுகவினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தனது மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு போட்டியாக கனிமொழி வந்துவிடக்கூடாது என்பதற்காகவே கனிமொழியை தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வைத்தார் மு.க.ஸ்டாலின் என்று ஒரு பேச்சு திமுகவின் மத்தியில் இருந்தது.அதை உறுதி செய்வதுபோல தூத்துக்குடியே கதி என்று இருந்தார் கனிமொழி. தலைநகர் சென்னையில் நடக்கும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அவரை பார்க்க முடியவில்லை.
சென்னை திமுக நிர்வாகிகள் அவருக்கு அழைப்பு கொடுப்பது இல்லை.டெல்லி செல்லாத நாட்களில் அவர் தூத்துக்குடியிலேயே முகாமிட்டு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார்.தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருந்தாலும் எந்த ஒரு அரசு திட்டத்தையும் கனிமொழியே தொடங்கி வைக்கும் நிலை இருந்தது. கட்சி நிகழ்ச்சிகளிலும் அவரே முக்கிய இடத்தை பிடிப்பார்.அவருக்கு பின்னாடியே அமைச்சர்கள் இருப்பார்கள்.இதனால், இரண்டு அமைச்சர்களும் அப்செட் நிலையில் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் கனிமொழியை பின் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் தூத்துக்குடியில் நடந்தது. அதில் சிறப்பு அழைப்பாளராக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் கனிமொழி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.முறைப்படி அழைப்பு கொடுக்காததே அவரது புறக்கணிப்புக்கு காரணம் என்று சொல்லப்பட்டது.
உதயநிதியே கனிமொழியிடம் போனில் பேசி கூட்டத்திற்கு வாருங்கள் என்று அழைத்ததாகவும், டூ லேட் என்று கனிமொழி மறுத்துவிட்டதாகவும் அப்போது சொல்லப்பட்டது. இதனால் கனிமொழிக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் லடாய். திமுகவினர் இனி கனிமொழியை மதிக்க மாட்டார்கள் என்று ரெக்கை கட்டியது வதந்திகள்.இந்த நிலையில் மக்கள் களம் எனும் நிகழ்ச்சியை நடத்த தொடங்கினார் கனிமொழி. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு நேரடியாக சென்று மக்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்பது மக்கள் களம் நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆதரவு இல்லாமல் மக்கள் களம் நிகழ்ச்சியை கனிமொழியால் வெற்றிகரமாக நடத்த முடியாது என்று பேசப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி கண் அசைவு இல்லை என்றால் அவர்கள் கனிமொழி பின்னாடி அணிவகுக்க மாட்டார்கள்.எனவே கனிமொழி நடத்தும் மக்கள் களம் நிகழ்ச்சி ஃபெயிலியர் ஆகும் என்றும் பேசப்பட்டது.
திமுகவினரின் நினைப்புக்கு மாறாக கனிமொழியை திமுகவினர் போட்டி போட்டு வரவேற்பு கொடுத்து மக்கள் களம் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். கடந்த 17ஆம் தேதி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் நடந்த மக்கள் களம் நிகழ்ச்சியில் கனிமொழி கலந்து கொண்டார். அவரை வரவேற்கும் விதமாக பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்த விளாத்திகுளம் தொகுதி எம்எல்ஏ மார்க்கண்டேயன், ஒருபடி மேலேபோய் மருதநாட்டு இளவரசியே வருக என்று கனிமொழிக்கு புதுப்பட்டத்துடன் விளம்பரம் கொடுத்தார்.
திமுகவினரின் அந்த விளம்பரத்தை பார்த்து உடன்பிறப்புகள் அசந்து போய் இருக்கிறார்கள். நாம் நினைப்பது போல் கனிமொழிக்கும் திமுக தலைமைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அண்ணன் தங்கை (ஸ்டாலின் கனிமொழி) அத்தை மருமகன் (உதயநிதி ஸ்டாலின், கனிமொழி) உறவு சிறப்பாகவே இருக்கிறது. தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதியில் கனிமொழி வெற்றி பெற வேண்டும் என்பதையே திமுக விரும்புகிறது. அதனால்தான் திமுக நிர்வாகிகள் அவருக்கு போட்டி போட்டு விளம்பரம் செய்கிறார்கள். எனவே, நான் யாருடைய ஆதரவு நிலைப்பாட்டையும் எடுக்காமல் அமைதியாக அரசியல் செய்வதை நல்லது என்கிறார்கள் தூத்துக்குடி உடன்பிறப்புகள்.
-எஸ்.அண்ணாதுரை
What's Your Reaction?