கஞ்சா போதையில் கத்தியை காட்டி மிரட்டிய 3 இளைஞர்கள் கைது

பூனிமாங்காடு கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

Jan 5, 2024 - 17:48
Jan 5, 2024 - 22:53
கஞ்சா போதையில் கத்தியை காட்டி மிரட்டிய 3 இளைஞர்கள் கைது

திருத்தணி அருகே கஞ்சா போதையில் கத்தியை காட்டி மிரட்டிய 3 இளைஞர்கள் அதிரடியாக காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம்,திருத்தணி அடுத்த பூனிமாங்காடு கிராமத்தில் உள்ள ஏரிக்கரை அருகே பொதுமக்கள் தேசிய ஊரக வேலை திட்டப் பணியை செய்து வந்தனர்.அப்போது ஆந்திராவில் இருந்து பூனிமாங்காடு கிராமத்தை நோக்கி கஞ்சா போதையில் மூன்று இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்துள்ளனர். இதனைக் பார்த்த அப்பகுதி பெண்கள் மோட்டார் சைக்கிள் நிறுத்தி வாலிபர்களிடம் ஏன் இவ்வளவு வேகமாக வருகிறீர்கள் என்று கேட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் மூன்று பேரும் அவர்களை ஆபாசமாக பேசி, தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டாகத்தியை எடுத்து பெண்களை தாக்க முயற்சி செய்துள்ளனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் கூச்சலிட்டு உள்ளனர். அருகில் வேலை செய்து கொண்டிருந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு இளைஞர்களிடம் இருந்து பட்டாகத்தியை பறித்தனர். பொதுமக்கள் பிடிக்க முயன்றபோது 3 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து பூனிமாங்காடு வழியாக தொடர்ந்து கஞ்சா கடத்துவதை தடுக்க வேண்டும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி திருத்தணி-நாகலாபுரம் மாநில நெடுஞ்சாலையில் பூனிமாங்காடு கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பெண்களை கத்தியை காட்டி மிரட்டிய வழக்கில் திருத்தணி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சாய் சுபாஷ் (வயது 19), புண்டரீகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கோகுல் ( வயது 21 ), ஜோதி நகர் பகுதியில் சேர்ந்த சுதன் (வயது 18) ஆகிய 3 பேரை போலீசார்  கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow