போக்சோவில் கைதான திமுகவை தலைகுனிய வைத்த நாகராஜ்?!
நாகராஜை கட்சியை விட்டு உடனே நீக்கி, கட்சிக்கு களங்கம் விளைவித்த அவரை கடுமையாக தண்டிக்க வேண்டும்
கோவை மாவட்ட திமுக என்றைக்குமே அதன் தலைமைக்கு தலைவலிதான்! கடந்த சட்டமன்ற தேர்தலில் வாஷ் அவுட் ஆகி, ஸ்டாலினை அதிர வைத்தது. அதன் பின், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, ஊழல் வழக்கில் கைதாகி, விசாரணைக்காக சிறையில் உள்ளார்.
சமீபத்தில் கோவையில் ‘இளைஞரணி செயல்வீரர்கள்’ கூட்டம் நடத்த வந்த உதயநிதி,அந்த அணியினரின் மிக மோசமான, கட்டுப்பாடற்ற, ஒழுங்கீனமான நடவடிக்கைகளில் அதிர்ச்சியானார். கோவை மாவட்ட செயலாளர்கள் மூன்று பேரையும் அழைத்து ‘இளைஞரணியை கட்டுப்பாடா வைக்கிற திறமை கூட உங்களுக்கு இல்லையா? நீங்க எப்படி கட்சியை வளர்ப்பீங்க?’ என்று திட்டிவிட்டு போனார்.
ஆக கோவை கழகம்னாலே கலகம் தான்! என்று அறிவாலயம் அதிர்ந்து கிடக்கும் நிலையில், இதற்கெல்லாம் உச்சமாக ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது கோவை திமுகவில். அதாவது கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த 14 வயது சிறுமி, தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 11ம் தேதி பள்ளிக்கு சென்றுவிட்டு திரும்பிய இவரிடம் அந்த ஏரியாவின் மாஜி தி.மு.க. கவுன்சிலரான நாகராஜ், அன்பாக பேசியுள்ளார். பின் சில சாதாரண காரணங்களை சொல்லி தன் வீட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கே திடீரென கதவை தாழ்போட்டவர், சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமி கதறி அழத்துவங்க, கதவை திறந்துவிட்டிருக்கிறார் நாகராஜ். வீட்டுக்கு வந்த சிறுமி இந்த சம்பவத்தை பெற்றோரிடம் சொல்லி அழுதிருக்கிறார்.ஆத்திரமடைந்த பெற்றோர், மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். விசாரித்த போலீஸார் நாகராஜை கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.
இந்த தகவல் வெளியே பரவியதும், கோவை மாவட்ட தி.மு.க.வின் வாட்ஸ் ஆப் குரூப்களில் நாகராஜின் போட்டோவை போட்டு, ’சொல்வதற்கே கேவலமாக உள்ளது! நமக்கெல்லாம் அசிங்கத்தை உருவாக்கி கொடுத்த நாகராஜ்ஜை கட்சியை விட்டு உடனே நீக்கி, கட்சிக்கு களங்கம் விளைவித்த அவரை கடுமையாக தண்டிக்க வேண்டும்’ என்று திட்டித் தீர்த்துக் கொண்டுள்ளனர்.
-ஷக்தி
What's Your Reaction?