புரட்சிக்குத் தயாராகும் இளைஞர்கள்... தமிழ்நாட்டு அரசியல் மரபைக் காக்கும் நடுத்தர வயதினர்... இந்த இரு பகுதியினர் இணைவார்களா?
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் 19ம் தேதி முதல் தொடங்குகிறது. முதற்கட்டமாக தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு தொடங்கும் நிலையில், இளம் வாக்காளர்களின் மனநிலை எப்படி உள்ளது என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம்.
சென்னை: தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்தத் தேர்தலில் வாக்களிக்க மொத்தம் 7 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்ந்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி மொத்தம் 6 கோடியே 18 லட்சத்து 90 ஆயிரத்து 348 வாக்காளர்கள் தமிழகத்தில் உள்ளனர். இதில் 3 கோடியே 3 லட்சத்து 96 ஆயிரத்து 330 ஆண் வாக்காளர்களும், 3 கோடியே 14 லட்சத்து 85 ஆயிரத்து 724 பெண் வாக்காளர்களும் உள்ளனர். ஆண்களைவிட பெண்களே இம்முறை 10 லட்சத்து 89 ஆயிரத்து 394 பேர்அதிகமாக உள்ளனர். 8 ஆயிரத்து 294 மூன்றாம் பாலினத்தவர்களும் வாக்காளர்களாக உள்ளனர்.
தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதியாக சோழிங்கநல்லூர் விளங்குகிறது. இந்தத் தொகுதியில் 6 லட்சத்து 60 ஆயிரத்து 419 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக நாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் தொகுதியில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 410 வாக்காளர்கள் உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் படி 40 முதல் 49 வயது வாக்காளர்களே அதிகமாக உள்ளனர். இதன் மூலம் 30 வயது முதல் 50 வயது உள்ள வாக்காளர்களே புதிய ஆட்சியை தீர்மானிக்கும் வாக்காளர்களாக உள்ளனர்.
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை தீர்மானிக்க போவது நடுத்தர வயது வாக்காளர்களா அல்லது இளம் வாக்காளர்களா என கேள்வி எழுந்தால், நிச்சயம் நடுத்தர வயது வாக்காளர்களே தீர்மானிக்கும் சக்தியாக இருப்பார்கள். ஏனென்றால் அந்த வயது வாக்காளர்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. நடுத்தர வயது வாக்காளர்கள், தமிழ்நாட்டின் அமைதியான சமூக நல்லிணக்க அரசியல் போக்கை இந்தியா முழுமைக்கும் ஆக்க விரும்புகின்றனர். அதனால் 2014, 2019 தேர்தல்களில் வாக்களித்ததைப் போலவே, மோடி வேண்டாம் என்று வாக்களிக்கப் போகின்றனர்.
இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக தமிழ்நாட்டில் 18 மற்றும் 19 வயதுகுட்பட்ட 10 லட்சத்து 92 ஆயிரம் இளம் வாக்காளர்கள் இந்த முறை புதிதாக வாக்களிக்க உள்ளனர். இந்த இளம் வாக்காளர்களுக்கு ஆட்சியிலிருந்த திராவிட இயக்கங்கள் மீது மனக்குறைகள் உள்ளன. ஆனாலும் அவர்களை ஈர்க்கக் கூடியதாக பாஜக இல்லை. அதுவும் பாஜகவைத் தோற்கடிக்கும் கூட்டணி என்கிறபோது அவர்கள் முன்னுள்ள தேர்வு இந்தியா கூட்டணி.
மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பொதுமக்கள் கூடும் முக்கிய சந்திப்புகளில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. “என் வாக்கு எனது உரிமை”, “வாக்களிப்பது எனது பொறுப்பு” போன்ற முழக்கங்கள் பொது இடங்களில் இசை மற்றும் நடனம் மூலம் பரப்பப்படுகிறது. இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு கல்லூரிகள் மற்றும் தொழில் பயிற்சி நிறுவன வளாகங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சியின் சார்பில் மெரினா கடற்கரையில் இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் மணற்சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நகரத்தைச் சேர்ந்த வாக்காளர்களும் படித்த வாக்காளர்களும் இளம் வயதினரும் அதிகமாக வாக்களிக்கும்போது, திமுக க்ளீன் ஸ்வீப் செய்யும் எனவும் கூறுகிறார்கள். முதல் முறையாக வாக்களித்து, விரலில் அழியாத மையை வைத்து செல்பி எடுக்கப்போவதாக இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் தெரிவிக்கின்றனர். வாக்குப் பதிவு எந்திரத்தில் எவ்வாறு தங்களது வாக்குகளை செலுத்துவது என்பது குறித்தும் இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் கேட்டறிந்து வருகின்றனர். தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் மற்றும் வேட்பாளர்களின் விபரங்கள் குறித்து தங்களது பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் கலந்தாலோசிப்பதாகவும் இளம் வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களில் ஒருபகுதியினர் புதிய தேர்வுகளை மேற்கொள்ளலாம். ஆனால் எல்லோரும் அப்படிச் செய்ய மாட்டார்கள்.
வாக்களிக்கத் தகுதியடைந்த வயதை அடைந்ததற்கு தாங்கள் பெருமையாகக் கருதுவதாகவும், சரியான சின்னத்தைத் தேர்ந்தெடுத்து வாக்களிக்க வேண்டும் என்பதில் தாங்கள் மிகுந்த கவனமாக உள்ளதாகவும் இளம் வாக்காளர்களின் கருத்தாக உள்ளது. வாக்களிக்கும் உரிமையை இழக்க விரும்பாத பல மாணவர்கள் தங்களது கோடை விடுமுறை சுற்றுலா பயணங்களையும் ஒத்திவைத்துள்ளனர். பலர் மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தங்கள் சொந்த ஊருக்கு செல்ல, படிப்பிலிருந்து சிறிது ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்ட சிலர், வாக்காளர் அடையாள அட்டையை பெறுவதற்காகக் காத்திருக்கின்றனர்.
இந்த இளம் வயதினர் இவ்வளவு தீவிரமான வாக்களிக்க விரும்புவதன் மூலம், ஒரு மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகின்றனர் எனத் தெரிகின்றது. அது மத்தியில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்த விரும்பும் தமிழ்நாட்டின் விருப்பத்தை வலுப்படுத்தும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். முதல் முறையாக மொத்தம் 10.92 லட்சம் இளம் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க காத்திருப்பதால், அவர்களின் வாக்குகள் தேர்தல் முடிவுகளில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
What's Your Reaction?