கோவையின் வளர்ச்சி.. தொழில் வளம் பாதுகாக்க தேர்தல் அறிக்கை.. திமுக வேட்பாளர் ராஜ்குமார் வாக்குறுதி
கோவையின் நகர்ப்புற கட்டமைப்பை மேம்படுத்தி, தொழில்நகரான கோவையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, தேர்தல் அறிக்கையை கோவை பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ளார்.
கோவை பீளமேட்டில் உள்ள திமுக தேர்தல் அலுவலகத்தில் அமைச்சர் டி ஆர் பி ராஜா, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, திமுக மாநகர் மாவட்ட செயலாளர் நா கார்த்திக், கோவை பாராளுமன்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் செய்தியாளர்கள் சந்தித்தனர். கோவை பாராளுமன்ற தொகுதிக்கான நகர கட்டமைப்பை மேம்படுத்தி, புதிய வளர்ச்சி திட்டங்கள் கொண்டுவரப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழில் நகரான கோவையின் எதிர்கால வளர்ச்சியை கவனத்தில் கொண்டு, அனைத்து துறை சார்ந்த தொழில்களுக்கு தேவைப்படும் கட்டமைப்புகளை உருவாக்கி தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் கல்வி மற்றும் திறன்களை மேம்படுத்தி, பல துறை சார்ந்த உலக அளவில் போட்டி போடும் வகையில் நவீன தொழில்நுட்பத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் மேம்பாடு, பசுமை திட்டங்களும் இதில் பட்டியலிடப்பட்டுள்ளன.
குறிப்பாக கோவையில் ஓடும் நொய்யல் ஆறு மற்றும் கௌசிகா நதி சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டு, நீர்நிலைகள் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் சுகாதாரம் மற்றும் வீட்டு வசதிகள் மேம்படுத்தப்படுவதுடன், நகரில் போக்குவரத்து வசதிகளும் நவீனப்படுத்தப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரை சுற்றிலும் புறவழிச் சாலைகள், மெட்ரோ ரயில்கள், மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலை கட்டமைப்புகள் மற்றும் புதிய மேம்பாலங்கள் கட்டமைப்பினால், சரக்கு போக்குவரத்து எளிமையாக்கப்படுவதுடன், பொருளாதாரம் வளர்ச்சி பெறும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் இயங்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை பாதுகாக்கும் விதமாக, கிளஸ்டர் மையங்கள் ஏற்படுத்தி தொழில் வளம் பாதுகாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் பஞ்சாலை கழகம் கோவையில் அமைக்கவும், வார்பட தொழிற்சாலைகள், ஜவுளி உற்பத்தி மேம்பாடு என பட்டியலப்பட்டுள்ளது. கோவையின் கலாச்சார மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் சுற்றுலா மையங்களாக மாற்றவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. கோவை நகரின் தீர்க்க முடியாத பிரச்சனையான வெள்ளலூர் குப்பை கிடங்கை சீரமைத்து, பிற பயன்பாட்டிற்கு தேர்வு செய்வதுடன், திடக்கழிவு மேலாண்மை மூலம் ஆங்காங்கே குப்பைகள் தரம் பிரிக்கும் மையங்கள், சுகாதார முறையில் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?